சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா, இன்று வியாழக்கிழமை, பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அவரிடம் ஐந்து மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில், நாளையும் அவர் விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார். வியாழனன்று காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட அவர், காலை பத்தரை மணியளவில், பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் மத்திய சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஜெயலலிதா வருகையை ஒட்டி, விமான நிலையத்தில் இருந்து நீதிமன்றம் வரை கடுமையான போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. நீதிமன்றத்தை ஒட்டிய பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்திலேயே தடுப்புக்கள் அமைக்கப்பட்டன. பத்திரிகைகளுக்கு அனுமதியில்லை வழக்கில் தொடர்புடையவர்கள் தவிர, நீதிமன்றத்துக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. நீதிபதியின் உத்தரவின்பேரில், பத்திரிகையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று போலீஸ் கமிஷனர் ஜோதிபிரகாஷ் தெரிவித்தார். பாதுகாப்புக் காரணங்களால், நேரில் ஆஜராவதை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, கர்நாடக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஜெயலலிதாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நேற்று நிராகரித்துவிட்டது. இதையடுத்து, ஜெயலலிதா இன்று நேரில் நீதிமன்றத்தி்ல் ஆஜராக வேண்டிய நிலை உருவானது. காலை பத்தரை மணிக்கே நீதிமன்றத்துக்கு ஜெயலலிதா வந்து சேர்ந்தார். 11 மணியளவில் நீதிபதி மல்லிகார்ஜுனையா வந்ததும் விசாரணை துவங்கியது. நீதிபதி முன்பு போடப்பட்ட நாற்காலியில் ஜெயலலிதா அமர்ந்திருந்தார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தொடர்ந்து கேள்விகளைக் கேட்டார். 11 மணி முதல் இரண்டு மணி வரை விசாரணை நடந்த பிறகு உணவு இடைவேளையின்போது, சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்ட சிறப்பு வாகனத்துக்குச் சென்று அங்கேயே உணவருந்தினார் ஜெயலலிதா. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தோழி சசிகலா, உறவினர் இளவரசி ஆகியோரும் ஜெயலலிதாவுடன் வந்திருந்தார்கள். மீண்டும் பிற்பகல் 2.45-க்குத் துவங்கிய விசாரணை மாலை 5.15 வரை நீடித்தது. தொடரும் விசாரணை ஜெயலலிதாவிடம் கேட்பதற்காக 1384 கேள்விகள் தயாரிக்கப்பட்டதாகவும், அதில் 379 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டிருப்பதால் ஜெயலலிதாவிடம் விசாரணை நாளையும் தொடரும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றும், குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்றும் ஜெயலலிதா பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இன்றைய விசாரணை முடிவடைந்து, மாலையில் சிறப்பு விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்பினார் ஜெயலலிதா. அவர் இன்று நீதிமன்றத்துக்கு வந்ததை ஒட்டி, அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பெருமளவில் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் யாரும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், கர்நாடக அதிமுக வழக்கறிஞர்கள், தொண்டர்களும் வந்திருந்தனர். அவர்கள் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்னதாகவே, தடுப்பு வேலி அருகே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதற்கிடையில், பரமக்குடியில் கடந்த மாதம் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்தும், ஜெயலலிதா பதவி விலகக் கோரியும், கர்நாடகத்தில் உள்ள தலித் அமைப்பினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களைக் கைது செய்த போலீசார் மாலையில் விடுதலை செய்தார்கள். கருணாநிதி கருத்து இதனிடையே, ஜெயலலிதா இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருப்பது குறித்துக் கருத்துத் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, `ஜெயலலிதா நீதிக்குத் தலைவணங்கியிருக்கிறார்’, என்று தெரிவித்தார். இதையடுத்து, ஜெயலலிதா முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டும் என திமுக கோருமா என்று கேட்டபோது, `எதற்கெடுத்தாலும் ராஜிநாமா செய்ய வேண்டு்ம் என்று கேட்பது ஜெயலலிதாவின் வழக்கம். நாங்கள் அதை பழக்கப்படுத்திக்கொள்ளவில்லை’, என்றார் கருணாநிதி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’