வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

'ஆட்சியாளர்களிடம் மனமாற்றம் தேவை'- மன்னார் ஆயர்


லங்கையில் போரினால் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை ஆட்சியாளர்கள் உணர்ந்து, நீதியான அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்க முன்வந்தாலே நாட்டில் நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தையும் ஐக்கியத்தையும் எதிர்பார்க்க முடியும் என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்
உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் இந்தப் பிரச்சனையை அணுகி, மக்கள் சுதந்திரமாக நடமாடும் சூழலை உறுதிப்படுத்த நாட்டின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆயர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.அருட் தந்தை ஜிம் பிரவுண் காணாமல் போய் 5 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில், அவரது நினைவாக மன்னாரில் இன்று சனிக்கிழமை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதாகவும் ஆயர் இராயப்பு ஆண்டகை தமிழோசையிடம் கூறினார். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்துக்கு பூசைக்காக சென்றிருந்த போது கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அருட் தந்தை ஜிம் பிரவுணும் சக ஊழியரும் காணாமல் போனார்கள். அவரது நிலமையை கண்டறிவதற்காக யாழ் ஆயரால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும் எவ்வித பலனும் கிட்டவில்லையென்றும், அவர் காணாமல் போன சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிவதில் அதிகாரிகளிடத்தில் தொடர்ச்சியாக அசமந்தப் போக்கே காணப்பட்டு வந்ததாகவும் மன்னார் ஆயர் தெரிவித்தார். கடந்த போர்க் காலத்தில், காணாமல் போன ஆயிரக் கணக்கான மக்கள் தொடர்பிலும் இதுதான் நிலைமை என்றும் இராயப்பு ஜோசப் ஆண்டகை சுட்டிக்காட்டினார். ஐநா குழுவோ அல்லது வேறு எந்த தரப்போ யுத்த காலத்து சம்பவங்கள் பற்றி சுட்டிக்காட்டும் விடயங்களில் என்ன உண்மை இருக்கிறது என்பதை கண்டறிவதற்கு அதிகாரிகள் முயற்சிக்காமல் அவற்றை பொதுவாக நிராகரித்துவிடும் போக்கு கூடாது என்றும் தெரிவித்தார். முன்னைய ஆணைக்குழுக்களால் எவ்வித பிரயோசனமும் கிடைத்திராத நிலையில், தற்போதைய நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகளும் அவ்விதம் பலனளிக்காது போய்விடக்கூடாது என்பதும் மன்னார் ஆயரின் கருத்து. கற்றறிந்த பாடங்கள் பற்றி ஆராயும் ஆணைக்குழு மூலம் நன்மை கிட்டும் என்ற நம்பிக்கையுடனேயே அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறிய இராயப்பு ஜோசப், நாட்டை ஆள்பவர்களிடத்தில் மன ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு அவர்களின் கவனம் மக்கள் பக்கம் திரும்பினால் மட்டுமே உண்மையான சமாதானத்தை எதிர்பார்க்க முடியும் என்றும் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’