வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு இந்தியா முன்னுரிமை: எஸ்.எம். கிருஷ்ணா

லங்கைத் தமிழர்களின் நலனானது தான் மிகுந்த முன்னுரிமையளிக்கும் விடயம் எனத் தெரிவித்துள்ள இந்தியா,
இலங்கையில் சிறுபான்மையினர் உட்பட அனைத்து சமூகங்களுக்கும் சுமூக சகவாழ்வை வழங்கும் நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, 'இலங்கையின் சூழ்நிலை' என்ற தலைப்பில் இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த விசேட அறிக்கையொன்றிலேயே இதைத் தெரிவித்துள்ளார்.
'இடம்பெயர்ந்த மக்கள் உட்பட இலங்கைத் தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதும் இலங்கையின் வடபகுதி அபிவிருத்திக்கு உதவுவதுமே இலங்கையில் நாம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளினதும் முதன்மை இலக்காக உள்ளது' என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை படையினரால் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் குறித்த கேள்வியொன்றுக்கு அமைச்சர் கிருஷ்ணா பதிலளிக்கையில் 'இந்திய இக்கரிசனைகளை கவனத்திற்கொண்டுள்ளது எனவும் ஆனால் தமிழர்களின் நலன்கள் குறித்தே இந்தியாவின் கவனம் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அவசரகால விதிகளை விரைவாக வாபஸ் பெறுதல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை விசாரித்தல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்புநிலையை ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றல் ஆகியவை குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் தான் வலியுறுத்தியுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.
அரசியல் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்துக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை தாம் வரவேற்பதாக கூறிய அவர், இச்செயன்முறையைத் தொடர்வதற்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெயர்ந்த 290,000 தமிழர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் சுமார் 10,000 பேர் மாத்திரம் இன்னும் முகாம்களில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
2010 ஆம் ஆண்டு இலங்கையினால் 137 இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் இவ்வருடம் ஓகஸ்ட் 3 ஆம் திகதிவரை 164 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை , கடந்த வருடம் 352 இலங்கை மீனவர்களும் இவ்வருடம் 131 இலங்கை மீனவர்களும் இந்திய படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 104 பேர் இன்னும் இந்தியாவினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கிருஷ்ணா கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’