வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

மர்ம மனிதன்: பீதியில் உறையும் கிராமங்கள்!


ச்சத்தின் உச்சத்தில் உறைந்து போய்க் கிடக்கின்றன அந்தக் கிராமங்கள்! பகல் வேளைகளில் மட்டுமே அதிகமான மக்கள் வெளியே வருகின்றார்கள். மாலையானதும் வீட்டுக்குள் அடங்கிப் போகின்றார்கள்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள இறக்காமம், வரிப்பத்தான்சேனை போன்ற பகுதிகளின் இன்றைய நிலைதான்
இது.
..அண்மைக் காலமாக இப் பகுதியில் நடமாடி வருவதாகக் கூறப்படும் 'மர்ம மனிதன்' பற்றிய கதைகள்தான் இந்த நிலைமைக்குக் காரணமாகும்! 


இறக்காமம் - வரிப்பத்தான்சேனை ஆகியவை எல்லைக் கிராமங்களாகும். இயற்கையாகவே இப் பகுதியில் கற்பாறைகள், பற்றைகள், காடுகள் அதிகளவாக அமையப் பெற்றுள்ளன. இலங்கையிலுள்ள நீண்ட வராலாறு கொண்ட கிராமங்களில் இறக்காமமும் ஒன்று!

இறக்காமம் பகுதியில் அண்மைக் காலமாக இரவு வேளைகளில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், இதனால் இப்பகுதியே பீதியடைந்துள்ளதாகவும் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. மேலும், இவ்விடயம் தொடர்பில் சில நாட்களுக்கு முன்னர் இறக்காமம் பொலிஸாருக்கும் - பொதுமக்களுக்குமிடையில் மோதலொன்றும் இடம்பெற்றிருந்தது. எனவே, இவை தொடர்பில் நேரடியாக அறிந்து கொள்வதற்காக – நாம் இறக்காமம், வரிப்பத்தான்சேனை ஆகிய பகுதிகளுக்குச் சென்றோம்!

முதலில் இறக்காமத்தையடைந்த நாம் - அங்கு மர்ம மனிதர்களை நேரடியாகக் கண்டவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டினோம்!


அந்தவகையில், இறக்காமத்தில் றசீனா உம்மா என்பவர் - குறித்த மர்ம மனிதனைக் கண்டதாக அறியக் கிடைத்தது. றசீனா உம்மாவைத் தேடிச் சென்று - சந்தித்துப் - பேசினோம்!
றசீனா உம்மா – அந்த நிகழ்வை அச்சத்துடன் ஞாபகித்தார்.

'வியாழக்கிழமையன்று (ஓகஸ்ட் 04ஆம் திகதி) இரவு 10 மணியிருக்கும். எனது சகோதரியின் வீட்டிற்கு வெளியேயுள்ள மணற் குவியலில் நானும், சகோதரியும், அவருடைய பிள்ளைகளுமாகச் சேர்ந்து சந்தோசமாகக் கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போது, 'நௌசாத்... நௌசாத்...' என்று என்னுடைய சகோதரியின் மகனுடைய பெயரைச் சொல்லி யாரோ கூப்பிட்டார்கள். நௌசாத்தின் நண்பர்கள்தான் யாராவது கூப்பிடுகிறார்களோ என்று நினைத்தேன். பிறகு மணலில் படுத்துக் கொண்டிருந்த நான் - தலையை உயர்த்திப் பார்த்த போது... கறுத்த உருவம் ஒன்று என் முன்னே சற்று தூரத்தில் நின்றது!

மர்ம மனிதர்கள் பற்றிய கதைகள் ஊர் முழுக்க உலவியதால், குறித்த உருவம் - மர்ம மனிதனாகத்தான் இருக்கும் என நான் அனுமானித்துக் கொண்டேன். நான் தைரியத்தை இழக்கவில்லை. உடனடியாக, எனது சகோதரியை அழைத்து – அவனைத் தாக்குவதற்குக் கத்தியை எடுத்துக் கொண்டு ஓடி வாருங்கள் என்று பல முறை சத்தமிட்டுக் கத்தினேன். பிறகு, நாங்கள் எல்லோரும் அவன் நின்ற இடத்தை நோக்கிச் சென்றோம். அவன் தப்பிச் சென்று விட்டான்.
அவன் - கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தான். முகத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால் முகமும் கறுப்பாகவே தெரிந்தது. முகமூடி அணிந்திருந்தானா இல்லையா என்று விளங்கவில்லை' என்றார் - றசீனா உம்மா!

குறித்த மர்ம மனிதன் வந்து சென்றதாகக் கூறப்படும் அநேகமான வீடுகளில் ஆண்கள் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆண்கள் வெளிநாடு சென்றுள்ள வீடுகள் அல்லது கணவனை இழந்தவர்களின் வீடுகள் மற்றும் இரவு வேலைக்கு ஆண்கள் சென்றிருந்த வீடுகளிலேயே அதிகமாக இந்த மர்ம மனிதனின் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருக்கின்றன.


வரிப்பத்தான்சேனையில் உள்ள சில வீடுகளுக்கும் மர்ம மனிதன் வந்து போனதாகத் தகவலறிந்தோம். எனவே, இறக்காமத்திலிருந்து வரிப்பத்தான்சேனை நோக்கி எமது பயணம் தொடர்ந்தது!


அங்கு – ஆமினா உம்மா என்பவரின் வீட்டிற்குச் சென்றோம். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் குறித்த மர்ம மனிதனுடன் 'போராடிய' கதையைக் கூறத் தொடங்கினார் அவர்ளூ

'31ஆம் திகதி நள்ளிரவு தாண்டி 2.00 மணியிருக்கும். எங்கள் வீட்டு ஜன்னல்களையெல்லாம் கள்வன் (மர்ம மனிதனை – கள்வன் என்றே கூறினார்) திறந்து விட்டு, கதவைத் திறக்கும் போதுதான் நாங்கள் விழித்துக் கொண்டோம்.

ஆனால் கள்வன் ஓடவில்லை. அவன்; வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தான். நாங்கள் அச்சமடைந்தோம். அருகிலிருந்த வீடுகளுக்கெல்லாம் தொலைபேசி மூலம் விடயத்தைத் தெரியப்படுத்தினோம். 119 எனும் அவசர பொலிஸ் இலக்கத்துக்கும் அறிவித்தோம். ஆயினும் சுமார் 45 நிமிடங்கள் அவன் வெளியில் நின்று கொண்டேயிருந்தான். அயலவர்களும் - திடீரென எங்கள் வளவுக்குள் நுளைவதற்குப் பயப்பட்டனர். பொலிஸாரும் வரவில்லை. பிறகு 2.45 மணியளவில் தூரத்திலிருந்த எமது உறவினர்கள் வந்தனர். நானும் வெளியே வந்தேன். அப்போதுதான் அவன் தப்பிச் சென்றான். என்னை மிகவும் அருகாமையில் கடந்துதான் ஓடினான். எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வளவு காடுபிடித்துப் போய்க் கிடப்பதால் அவன் மிக இலகுவாகத் தப்பிச் செல்ல முடிந்தது.

அவன் கறுப்பு நிறத்தில் இருந்தான். சாதாரண உயரம்தான். எங்கள் வீட்டுக்கு வெளியில் எரிந்து கொண்டிருந்த மின்குமிழை அணைக்குமாறு அவன் தமிழ் மொழியில் தூசண வார்த்தைகளால் சத்தமிட்டான்'

ஆமினா உம்மாவின் பெண் பிள்ளைகளும் அப்போது வீட்டில் இருந்திருக்கின்றார்கள். பிள்ளைகளில் ஒருவர் - ஜன்னல் இடுக்கினால் வெளியே பார்க்க முயற்சித்த போது, குறித்த மர்ம மனிதன் ஜன்னலில் ஓங்கி அடித்திருக்கின்றான். இதனால், பீதியடைந்த அந்தப் பிள்ளை அலறியடித்துச் சத்தமிட்டிருக்கின்றார்.

மர்ம மனிதர்களைக் கண்டதாகக் கூறும் மேலும் இருவரையும் நாம் சந்தித்தோம். கறுப்பு ஆடைகள் அணிந்த இரண்டு பேரைத் தாம் - ஒரே நேரத்தில் பார்த்ததாக – அவர்கள் கூறினார்கள்.

இதேவேளை, எந்தவொரு வீட்டிலும் மர்ம மனிதன் இதுவரையில் எதையும் திருடியதாக யாரும் கூறவில்லை. யாரையும் தாக்கியதாக முறைப்பாடுகளுமில்லை.

இது இப்படியிருக்க, மர்ம மனிதர்கள் இருவரை இறக்காமம் பிரதேசத்தில் பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் பொலிஸார் இது விடயத்தில் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்டதாகவும் மக்கள் மத்தியில் இரண்டு கதைகள் பேசப்படுகின்றன!

முதலாவது கதை: கடந்த 31ஆம் திகதியன்று இரவு – இறக்காமம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக ஒருவர் நடமாடியிருக்கின்றார். அவரை அதற்கு முன்பு அப்பகுதியில் மக்கள் கண்டிருக்கவில்லை. எனவே, உடனடியாக அங்கு நின்ற சிலர் - குறித்த சந்தேக நபரைப் பிடித்து முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றி வந்து, இறக்காமம் பொலிஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

ஆனால், பொலிஸாரிடம் சந்தேக நபர் ஏதோவொரு பொருளைக் காண்பித்திருக்கின்றார். உடனே, சந்தேக நபருக்குப் பொலிஸார் 'சல்யூட்' அடித்து விட்டு, அவரைத் தப்பிக்க விட்டுள்ளனர்.

இரண்டாவது கதை: இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் கடந்த 03ஆம் திகதி இரவு அப்பகுதியில் சந்தேகம் தரும் வகையில் உலவிய ஒருவரைப் பிடித்துக் கொண்டு வந்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார்கள். இவ்விடயம் ஊர் முழுக்கப் பரவியது. மர்ம மனிதர்களில் ஒருவர் பொலிஸில் பிடிபட்டுள்ளதாக மக்கள் நம்பினார்கள். இறக்காமம் பொலிஸ் நிலையத்துக்கு ஊரே திரண்டு வந்தது. பிடிபட்ட மர்ம மனிதனை தம்மிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரிடம் மக்கள் கேட்டார்கள்.

ஆனால், பொலிஸார் - மக்களின் கோரிக்கைக்கு இணங்கவில்லை. இதனால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு - இறுதியில் பொலிஸ் நிலையத்தை மக்கள் தாக்கும் நிலைக்குச் சென்றனர்.

மேலுள்ள கதைகளின் அடிப்படையில், இறக்காமம் மற்றும் வரிப்பத்தான்சேனையில் உலாவி வரும் மர்ம மனிதர்களை இறக்காமம் பொலிஸார் காப்பாற்றிருக்கின்றார்கள், தப்பிக்க வைத்துள்ளார்கள்!
இந்த இரண்டு கதைகள் குறித்தும் பொலிஸார் என்ன சொல்கின்றார்கள் என அறியும் பொருட்டு, இறக்காமம் பொலிஸ் நிலையம் சென்றோம். சரியாகச் சொன்னால் அது ஒரு உப பொலிஸ் நிலையம். தமணை பொலிஸ் நிலைய நிருவாகத்தின் கீழ் இயங்கி வருகின்றது.


நல்ல வேளையாக, நிலையப் பொறுப்பதிகாரி அங்கிருந்தார். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம். நிலையப் பொறுப்பதிகாரியின் பெயர் எம்.வை.ஜௌபர். இவரும் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்தான். மர்ம மனிதர்கள் குறித்து எங்களிடமிருந்த கேள்விகளுக்கெல்லாம் மிகவும் நிதானமாகப் பதிலளித்தார்.

முதலாவது கதைக்கான விளக்கம்: 'கடந்த 31ஆம் திகதியன்று இரவு இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் நபர் ஒருவரைப் பிடித்துக் கொண்டு வந்து இறக்காமம் பொலிஸில் ஒப்படைத்தமை உண்மைதான். ஆனால், குறித்த நபர் சந்தேசகத்துக்கு உரியவரல்லர்! அவர் ஒரு பொலிஸ் உப பரிசோதகர். அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்றார். வெளியூரைச் சேர்ந்தவர்.
விடுமுறையில் தனது வீட்டுக்குச் சென்றிருந்த இவர் சம்பவ தினம் கடமைக்குத் திரும்பியிருக்கின்றார். அந்தவகையில், தனது ஊரிலிருந்து அம்பாறைக்கு வந்த குறித்த பொலிஸ் உப பரிசோதகருக்கு அக்கரைப்பற்றுக்கு வருவதற்கு வாகனம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அம்பாறையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி வந்த இவரை - இறுதியாக ஒருவர் இறக்காமத்தில் இறக்கி விட்டுச் சென்றிருக்கின்றார்;!

ஆக, அக்கரைப்பற்றுக்குச் செல்வதற்காக பஸ் மற்றும் வாகனங்கள் இன்றி வீதியில் தவித்துக் கொண்டிருந்த பொலிஸ் உப பரிசோதகரைத்தான் - மர்ம மனிதன் எனும் பீதியில் இருந்தோர் சந்தேகப்பட்டுப் பிடித்து வந்தார்கள்.

ஆயினும், சந்தேகத்துக்குரிய உப பரிசோதகர் - தான் யார் என்பதை விளக்கினார். தன்னை நிரூபிக்கும் அடையாள அட்டைகளை காண்பித்தார். அதேவேளை நாமும் அக்கரைப்பற்றுப் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு இவர் கூறிய விடயங்களை உறுதி செய்த பின்னர்தான். அவரை – அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தோம்' என்றார் இறக்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி.

இரண்டாவது கதைக்கான விளக்கம்: சில இளைஞர்கள் கடந்த 03ஆம் திகதி இரவு சந்தேகத்துக்கிடமாக இறக்காமம் பகுதியில் காணப்பட்ட நபரொருவரைப் பிடித்துக் கொண்டு வந்து எம்மிடம் ஒப்படைத்தார்கள்.

அந்த நபரிடம் நாம் விசாரணைகளை நடத்திக் கொண்டிருந்த போது, இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தை நோக்கி வந்தனர். குறித்த சந்தேக நபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு ஆத்திரத்துடன் சத்தமிட்டனர்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் - இறக்காமம் பிரதேசத்தில் உலவுவதாகப் பேசப்படும் மர்ம மனிதர்களில் ஒருவர் என்றுதான் மக்கள் நம்பினர்.

சந்தேக நபரை மக்களிடம் ஒப்படைத்திருந்தால் - மக்கள் அடித்தே கொன்றிருப்பார்கள். எனவே, மக்களை நாம் ஆற்றுப்படுத்தும் வகையில் பல வழிகளிலும் பேசினோம். பள்ளிவாசல் தலைவர், ஊர் பிரமுகர்களையெல்லாம் அழைத்துப் பேசினோம். ஆயினும், சமரசங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இறுதியில், இறக்காமம் பொலிஸ் நிலையத்தைச் சுற்றி முற்றுகையிட்ட மக்கள் - கற்களாலும், தடிகளாலும் தாக்கினார்கள். அங்கிருந்த வாகனங்களை எரியூட்டினார்கள், இதனால் 08 பொலிஸார் காயமடைந்தனர். கடைசியில், தமணையிலிருந்து வந்த விசேட பொலிஸ் பிரிவினர்தான் நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.


இதில் கவலைக்குரிய வேடிக்கை என்னவென்றால், சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட அந்த நபர் உண்மையில் ஒரு மனநோயாளி. சம்மாந்துறையைச் சேர்ந்தவர். பெயர் - வெள்ளத்தம்பி ஆதம்பாவா. வீட்டில் மஜீத் என்று அழைப்பார்கள்.

ஆக, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மக்கள் கூறும் கதைகளுக்கும் கருத்துக்களுக்கும் இணங்க பொலிஸாரால் செயற்பட முடியாது. எமது கடமையை நாம் செய்திருக்கின்றோம். அவ்வளவுதான்' என்றார் பொறுப்பதிகாரி ஜௌபர்!


பொலிஸ் நிலையத்தினுள் நாம் இருந்த போது, பொலிஸ் நிலையக் கட்டிடக் கூரைகள் மற்றும் வளவு முழுக்க சிறு சிறு கற்களாகக் காணப்பட்டன. விசாரித்ததில், அவை - பொதுமக்கள் தாக்கிய கற்களில் இன்னும் அகற்றி முடிக்கப்படாதவை எனத் தெரியவந்தது!

மர்ம மனிதர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் மக்களிடம் இதனால் ஏற்பட்டுள்ள மனநிலை குறித்தெல்லாம் தெரிந்து கொள்ளும் பொருட்டு - இப் பகுதிகளில் நாம் சந்தித்த பொதுமக்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.

அப்போது, நபரொருவர் கூறிய தகவல்களில் ஒன்று – குறிப்பிடும் படியானது.

அவரின் பெயர் எஸ்.எல்.பாறூக். வரிப்பத்தான்சேனை இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர். அவர் நம்மிடம் இவ்வாறு பேசினார்-

'மர்ம மனிதர்கள் பற்றிய கதைகளால் ஊரில் மிகவும் மோசமான பீதி நிலவுகின்றது. இரவானால் பெண்கள் வெளியில் செல்வதற்குப் பயப்படுகின்றார்கள். ஆண்களையும் வீட்டிலேயே இருக்குமாறு வற்புறுத்துகின்றார்கள். இதனால், எங்கள் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எமது பாதுகாப்புக்காக நாம் அரசாங்க அனுமதியுடனான துப்பாக்கிகளை முன்பு வைத்திருந்தோம். அவை இருந்திருந்தால் இந்த நிலையை ஓரளவுக்கு சமாளித்திருக்க முடியும். ஆனால், இந்த மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர், (07ஆம் மாதம் 28ஆம் திகதி) தமணை பொலிஸார் எம்மிடமிருந்த துப்பாக்கிகளையெல்லாம் வாங்கியெடுத்து விட்டனர்!'

மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு - சரியாக இரண்டு நாட்களுக்கு முன்னர், பொதுமக்களிடமிருந்த அனுமதிப்பத்திரத்தினுடனான துப்பாக்கிகளை பொலிஸார் ஏன் பெற்றுக் கொண்டார்கள்? அதற்குரிய தேவைதான் என்ன? இறக்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜௌபரிடம் கேட்டோம்.

'இந்த துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். இப்போது பயங்கரவாதப் பிரச்சினைகள் இல்லை. எனவே, பாதுகாப்புக்காக துப்பாக்கிகள் தேவைப்படாது. தவிரவும், இந்தத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சிலர் - மிருகங்களை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வந்தன. எனவேதான், குறித்த துப்பாக்கிகளை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டோம்' என்றார் நிலையப் பொறுப்பதிகாரி!
இறக்காமம் பொலிஸாரின் தகவலின் படி, மேற்படி மர்ம மனிதன் குறித்து பொலிஸாரிடம் இதுவரை (06 ஓகஸ்ட் 2011 வரை) நேரடியாக இரண்டு முறைப்பாடுகளும், தொலைபேசி மூலமாக 15 முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, இறக்காமம் வரிப்பத்தான்சேனைப் பகுதிகளில் தற்போது - மேலதிகமாக 40 பொலிஸார் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். (இறக்காமம் மக்களால் சந்தேகத்தின் பேரில் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரும் மேற்படி விசேட கடமைக்காக இறக்காமம் வந்துள்ளார் என்பது ஆச்சரியமான நகைச்சுவையாகும்!) பிரதேசம் முழுவதும் 11 பொலிஸ் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர ஊரெல்லாம் நடமாடும் பாதுகாப்புக் கடமையிலும் பொலிஸார் ஈடுபட்டும் வருகின்றனர்.

இத்தனைக்கு மத்தியிலும் சில வீடுகளில் மர்ம மனிதனின் தொந்தரவு இடம்பெற்றுள்ளமைதான் ஆச்சரியமானது! 

அச்சத்துள் வாழ்தல் என்பது மிகவும் கொடூரமானதொரு அனுபவமாகும்.

'நிம்மதியாகச் சாப்பிட முடியவில்லை. பிடறிக்குப் பின்னால் யாரோ நிற்பது போல் பயமாக இருக்கிறது' என்று நாம் சந்தித்த பெண்ணொருவர் அழுகை நிரம்பிய மொழியில் பேசியபோது கவலையாகவும் பரிதாபமாகவும் இருந்தது.

இந்த மர்ம மனிதர்கள் யார்? இவர்களின் நோக்கம் அல்லது தேவைதான் என்ன எனப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் - மர்ம மனிதர்கள் குறித்து மக்கள் மத்தியில் ஏராளமான அனுமானக் கதைகள் உருவாகியுள்ளன. அவைகளில் சில – அரசாங்கத்தைச் சந்தேகிக்கும் படியானவை.

எனவே, இந்த விவகாரத்தில் பொதுமக்களின் அச்சத்தைத் துடைத்தெறியும் வகையிலும், அரசாங்கம் குறித்து பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள சந்தேகங்களைக் களையும் வகையிலும் ஆட்சியாளர்கள் உடனடியாகச் செயற்படுதல் வேண்டும்!

மர்ம மனிதன் குறித்த - மர்மங்கள் துலங்க வேண்டும்!!


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’