தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த மாநாடு செப்டெம்பர் 11 ஆம் திகதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது:
ஐனநாயகக் கட்சிகளின் அமைப்பு விதிகளுக்கமைய தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமது மாநாட்டை நடத்துகின்றது. இம்மநாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்படாது அதற்கு வலுச்சேர்க்கும் ஒன்றாக அமையும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்.
அரசியற் கட்சி என்ற வகையில் கட்சியின் நடைமுறைகள், செயற்பாடுகளுக்கமையவே வருடா வருடம் மகாநாடு ஒன்றை நடத்தவேண்டியது தவிர்க்க முடியாத நிலைப்பாடும் அமைப்பு விதியுமாகும். அதற்கமைய எமது மாநாடு யாழ்ப்பாண நகரில் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணி பிரிவினையை வளர்க்காது தொடர்ந்தும் ஒற்றுமையை பேணும் என்பதில் மாற்றம் இல்லை. தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை பொறுத்தவரையில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழத் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் சகல கட்சிகளுடனும் மட்டும்தான் தொடர்ந்து இணைந்து செயற்படும். எமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. தமிழர் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தொடர்ந்து நாம் உரிமைக் குரல் கொடுப்போம், உறவுக்கு கைகொடுப்போம், என்ற நிலைப்பாட்டில் நாம் என்றும் உறுதியாக இருப்போம். இதை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் தமிழ் மக்களும் சர்வதேசமும் அறிந்து கொள்ளவும் புரிந்துகொள்ளவும் வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படும் சகல கட்சிகளுக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விட உள்ளேன். சகல தமிழ் மக்களையும் மாநாட்டில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். இம்மாநாடு தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் மாநாடாகவே அமையவேண்டும். இந்த நேரத்தில் ஒன்றுபட்டு ஓர் அணியில் செயற்படும் தமிழ்க்கட்சிகளின் தமிழத் தேசிய கூட்டமைப்பில் இதுவரை சேராமல் விலகி நிற்கும் தமிழ்க்கட்சிகளையும் பிரிந்து நிற்காமல் தமிழத் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுக்கின்றேன்.
நடைபெறவுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாடு நிச்சயமாக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் ஒன்றுபட்டு நிற்கும் தமிழர்களின் ஒற்றுமையை வெளிக்காட்டும் மாநாடாக அமையவேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’