வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 9 ஜூன், 2011

நாளை திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்-காங்கிரசுடன் கூட்டணி முறியுமா?

தி முக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் கருணாநிதி தலைமையில் நாளை மாலை கூடுகிறது. இதில் காங்கிரசுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்யும் வகையில் திமுக முக்கிய முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் சுத்தமாக பலமே இல்லாமல் ஓசி சவாரி செய்து வரும் காங்கிரஸ் கட்சியிடம் சிக்கிக் கொண்டு தவியாத் தவிக்கிறது திமுக. எந்த காங்கிரஸை தமிழக ஆட்சிக் கட்டிலிலிருந்து நிரந்தரமாக விரட்டியதோ,அதே காங்கிரஸுடன் இப்போது உறவு வைத்துக் கொண்டு விடுபட முடியாமலும், அதேசமயம், பெரும் அவஸ்தைக்குள்ளும் சிக்கிக் கொண்டு விழிக்கிறது திமுக.
இந்த விவகாரத்தில் திமுகவை காங்கிரஸ் கை கழுவி நாட்களாகி விட்டது. இருந்தாலும் திமுக தொடர்ந்து காங்கிரஸை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. திமுக தானாகவே வெளியே போகாதா என்ற எதிர்பார்ப்பில் தான் காங்கிரஸ் உள்ளது. இதை கனிமொழி விஷயத்தில் மறைமுகமாகவே காட்டிவிட்டது காங்கிரஸ்.
இப்போது 2ஜி ஸ்பெட்க்ரம் வழக்கில் திமுக எம்பி கனிமொழி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சிபிஐ சிறப்பு நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டன. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளார்.

இந் நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவின் அவசரக் கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.

இதில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், துரைமுருகன், அழகிரி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

காங்கிரஸே சில நாட்களுக்கு முன் மறைமுகமாக 'கூடா நட்பு' என்று கருணாநிதி விமர்சித்தார். அதே போல திருவாரூரில் நடந்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, எனது மகள் கனிமொழி கைது செய்யப்பட்டதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று நேரடியாகவே குற்றம் சாட்டியிருந்தார்.

இந் நிலையில் நாளைய கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படவுள்ளது என்று தெரியவில்லை. ஆனால் இப்போதைய நிலையில் கனிமொழிதான் பெரும் கவலையான விஷயம் என்பதால் அதுகுறித்துதான் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்யும் வகையில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுவது அல்லது மத்திய அமைச்சர்களை வாபஸ் பெற்று வெளியிலிருந்து ஆதரவு தருவது ஆகியவற்றில் ஏதாவது ஒரு முடிவை திமுக எடுக்கலாம் என்று தெரிகிறது. குறைந்தபட்சம் கனிமொழிக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது என்று திமுக முடிவெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த விஷயம் தவிர, இலங்கை விவகாரம், புதிய தலைமைச் செயலகம் மாற்றப்பட்டது, சமச்சீர் கல்வி விவகாரம் ஆகியவற்றை கண்டித்து மாநில அளவில் போராட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

கனிமொழிக்கு ஆதரவாக போராட்டம் நடத்த திமுக முடிவெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’