வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 9 ஜூன், 2011

கிழக்கு மீட்கப்பட்டு 3 வருடங்களுக்குள் 300 க்கும் அதிகமானோர் கடத்தப்பட்டுள்ளனர் ; த.தே.கூ

கி ழக்கு மாகாணம் மீட்கப்பட்டு மூன்று வருட காலப்பகுதிக்குள் அங்கு 300க்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களது சகல விபரங்களும் பொலிஸாருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அந்த இளைஞர் யுவதிகள் எங்கிருக்கின்றனர் என்று இதுவரையில் அறிய முடியாத நிலையில் பெற்றோர் தவிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம். பி பொன். செல்வராசா நேற்று சபையில் தெரிவித்தார்.


கடந்த மாõத்தில் மாத்திரம் மட்டக்களப்பில் நான்கு கொலைகள் இடம் பெற்றுள்ளன. இதில் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படியானால் அவசர காலச்சட்டம் நீடிக்கப்பட்டு வருகின்ற இன்றைய காலகட்டத்தில் கிழக்கில் சில ஆயுதக் குழுக்கள் இருப்பது தெளிவாகின்றது என்றால் இந்த அவசரகாலச் சட்டத்தில் என்ன பிரயோசனம் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசர காலச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே செல்வராசா எம். பி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;
அவசரகாலச் சட்டம் மாதா மாதம் நீடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் படையினரைத் தவிர வேறு குழுக்களிடம் ஆயுதம் இருக்க முடியுமா? கடந்த மாதம் மட்டக்களப்பில் நான்கு கொலைகள் இடம்பெற்று உள்ளன. இதில் இருவர் துப்பாக்கி பிரயோகத்தால் இறந்துள்ளனர். இது இவ்வாறிருக்க நேற்று (நேற்று முன்தினம்) வெல்லா வெளிப் பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்டு பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார். எனவே தான் இந்த அவசரகாலச் சட்டத்தில் என்ன பிரயோசனம் இருக்கிறது என்று கேட்க விரும்புகிறேன்.
கிழக்கு மாகாணத்தில் அரச காணிகளில் கூட அத்துமீறி குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. வவுணதீவில் உள்ள 3000 ஏக்கர் மேய்ச்சல் நில அரச காணிகள் அம்பாறை மாவட்ட ஊர்காவற் படையினரின் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு கிழக்கு மாகாண சபையும் அங்கீகாரம் அளித்திருக்கின்றது. கட்டைகளையும் வழங்கி கம்பிகளையும் வழங்கியிருப்பது கிழக்கு மாகாண சபை அமைச்சாகும். அரச காணிகளில் அத்துமீறி குடியேறுவதற்கு ஒரு மாகாண சபையே உதவுகின்றது, அப்படியெனில் நாட்டிலுள்ள அனைத்து அரச காணிகளிலும் பொது மக்கள் அத்துமீறி குடியேற முடியுமா? மட்டக்களப்பிலுள்ள விவசாயக் காணிகளில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்து விவசாயம் மேற்கொள்கின்றனர். இதற்கு கிழக்கு மாகாண சபை உடந்தையாக இருக்கின்றது.
கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு மூன்று வருடங்களில் அங்கு 300க்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த முகாம்களில் உள்ளனர் என்பது இதுவரையில் அறியப்படவில்லை.
கடத்தப்பட்டு காணாமல் போன இந்த இளைஞர் யுவதிகளின் பெற்றோரை சந்தித்து விபரங்களைத் திரட்டி அதனைப் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளோம். ஆனால் அவர்களில் ஒருவரைக் கூட கண்டு பிடிக்க முடியவில்லை.
மட்டக்களப்பின் சில பகுதிகள் அம்பாறை மாவட்ட பொலிஸ் பிரிவின் கீழ் வருகின்றன. வவுணதீவின் சில பகுதிகள் மஹா ஓயா பொலிஸ் பிரிவின் கீழ் வருகின்றன. இதனால் விசாரணை நடவடிக்கைகள் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அங்குள்ள மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். எனவே மட்டக்களப்பின் பகுதிகள் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குள்ளேயே இணைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
கட்டுநாயக்க சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எடுத்த உடனடி தீர்மானத்தை நாம் பாராட்டுகிறோம். எனினும் இதே போன்றதொரு நிலை வடக்கு கிழக்கில் இடம்பெற்றிருந்தால் அரசாங்கம் இவ்வாறு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா? என்று கேட்க விரும்புகிறேன்.
மட்டக்களப்பில் பட்டதாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது கல் எறியவில்லை, பொலிஸாரைத் தாக்கவில்லை. ஆனாலும் பொலிஸார் மாணவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினர். இந்த விடயத்தில் அரசாங்கம் பக்கச் சார்பாக நடந்து கொண்டுள்ளது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’