வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 30 மே, 2011

ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் _

ஜெ னிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 17 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. பேரவையின் அமர்வுகள் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் கலந்துகொள்ளும் பொருட்டு மனித உரிமைகள் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் ஜெனிவா சென்றுள்ளனர்.
மனித உரிமை பேரவையின் ஆரம்ப நாளான இன்று இலங்கையின் சார்பில் பிரதான உரையை நிகழ்த்தவுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
47 அங்கத்துவ நாடுகளைக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 17 ஆவது கூட்டத் தொடரில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை மனித உரிமை பேரவையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நிகழ்த்தவுள்ள உரையில் யுத்தத்தின் பின்னரான இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி நிலைமைகள் மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் குறித்து தெளிவுபடுத்துவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அதன் இடைக்கால பரிந்துரைகள் மற்றும் அனைத்து நிறுவன ஆலோசனைக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் அமைச்சர் சமரசிங்கவின் உரையின்போது விளக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையை இலங்கை தூதுக்குழுவின் தலைவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்கள் மற்றும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலைமை என்பன தொடர்பில் நவநீதம் பிள்ளைக்கு அமைச்சர் சமரசிங்க விளக்குவார் என்று கூறப்படுகின்றது.
மேலும் மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகளின் பல பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ள அமைச்சர் சமரசிங்க இலங்கையின் முன்னேற்ற நிலைமை குறித்து தெளிவுபடுத்துவார் என்று தெரியவருகின்றது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் தருஷ்மன் அறிக்கையை அடிப்படையாக வைத்துக்கொண்டு மனித உரிமை பேரவையில் விடயங்கள் முன்வைக்கப்பட்டால் அது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கவும் தெளிவுபடுத்தவும் இலங்கை தூதுக்குழுவினர் முயற்சிகளை மேற்கொள்வர் என்றும் தெரிகின்றது.
எனினும் இம்முறை மனித உரிமை பேரவை கூட்டத் தொடரின்போது தருஷ்மன் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்படமாட்டாது என்றே தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’