வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 26 மே, 2011

நெதர்லாந்தில் செயற்பட்டு வந்த புலிகளின் முக்கியஸ்தர் ராமச்சந்திரன் கைது

நெ தர்லாந்தில் செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் எஸ். ராமச்சந்திரன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகளின் பிரிவொன்றின் தலைவராகவும்,
முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் செயற்பட்டு வந்த நெடியவன் எனப்படும் சிவரூபன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின் நெதர்லாந்தில் ராமச்சந்திரனின் கைது சம்பவம் நடைபெற்றுள்ளது.
ராமச்சந்திரனின் வீட்டை சோதனையிட்ட பொலிஸார் பென் டிரைவ் (யு. எஸ். பி) யில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 136 மில்லியன் பணம் தொடர்பான விபரங்களையும் கைப்பற்றியுள்ளனர். அப்பணம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆயுதக் கொள்வனவுக்காக ஐரோப்பிய வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்யும் ஒபரேசன் கொன்னிக் நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய நெதர்லாந்து அலுவலகத்தில் பிரதானியாக செயற்பட்ட ஞானம் என்பவரும் நெதர்லாந்தின் இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இவர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஹேக், ட்ராசெய்ஸ்ட், அம்ஸ்டர்டாம், ரல்டே மற்றும் அமசோடம் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளையடுத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்புத் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நெதர்லாந்து அதிகாரிகள் இலங்கையிலுள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளிடம் விசாரணை நடத்த அனுமதி கோரியுள்ளனர்.
இது தொடர்பாக நெதர்லாந்து வானொலி வெளியிட்டுள்ள தகவலில், குமரன் பத்மநாதன் உள்ளிட்ட 13 பேரை அடுத்த மாதம் விசாரிக்க இலங்கையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை சட்டமா அதிபர் மொகான் பீரிசுடன் நெதர்லாந்து அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
அதேவேளை, இந்த விவகாரம் பற்றிய சாட்சியங்களைப் பெறுவதற்காக நெதர்லாந்து நீதிவான்களும், சட்டவாளர்களும் அமெரிக்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
அமெரிக்காவில் இவர்கள் புலிகளின் ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைகளில் தொடர்புடைய பிரதீபன் தவராசாவிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.
இவர் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் விடுதலைப் புலிகளுக்கு வெடி பொருட்கள், இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள், ஆட்டிலறிகள், ரேடர்கள் போன்ற ஆயுதங்களை கொள்வனவு செய்திருந்தார்.
இவரது மடிக்கணினியில், 20 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான முன்னுரிமைப் பட்டியல் ஒன்றை அமெரிக்காவின் சமஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.
அந்தப் பட்டியலில் ஒவ்வொன்றும் 160,000 டொலர் பெறுமதியான 25 மி. மீ. விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஆறு, ஒவ்வொன்றும் 30,000 டொலர் பெறுமதியான ரைப் 69 ரகத்தைச் சேர்ந்த இரட்டைக் குழல் 30 மி. மீ. கடற்படைப் பீரங்கிகள் ஆறு, ஆயிரக்கணக்கான தன்னியக்கத் துப்பாக்கிகள், மில்லியன் கணக்கான ரவைகள், கிரனேட் செலுத்திகள், 50 தொன் சி 4 வெடிமருந்து, 5 தொன் ஆர் டி எக்ஸ் வெடிப்பொருள், 50 தொன் ரி என் ரி சீன வெடிபொருள், விமானக் குண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 தொன் ட்ரைரோனல் வெடி பொருள் ஆகியவை இருந்ததாக அமெரிக்காவின் சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்தில் உள்ள இராமச்சந்திரன் என்பவர் இந்த ஆயுதக் கொள்வனவுகளுடன் தொடர்புபட்டிருந்ததாக பிரதீபனின் மடிக் கணினியில் இருந்த தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து நெதர்லாந்து விசாரணைக் குழுவொன்று நேற்று ஒஸ்லோவுக்கு செல்ல ஏற்பாடாகியிருந்தது.
சந்தேக நபர்களின் சட்ட வாளர்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர் நெடியவனிடம் விசாரணை நடத்தவே ஒஸ்லோ செல்கின்றனர். இவர் விடுதலைப் புலிகளுக்கு மில்லியன் கணக்கான டொலர் பணத்தை வழங்கியதாக நெதர்லாந்து அதிகாரிகள் நம்புகின்றனர். "ஒப்பரேசன் கொனின்க்' என்ற பெயரில் நெதர்லாந்து அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் இந்த நிதி வலையமைப்பு மீதான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கையில் நெதர்லாந்தில் 90 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டசின் கணக்காக வீடுகளில் நடத்தப்பட்ட தேடுதல்களில் கணினிகள், இறுவட்டுகள், ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் நெதர்லாந்து வானொலி தகவல் வெளியிட்டுள்ளது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’