வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 13 ஏப்ரல், 2011

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சுமத்துகிறது: பிரதியமைச்சர் முரளிதரன்

மது பெயரில் அமெரிக்க இராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ள மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தம்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குரிய ஆதாரத்தை முடிந்தால் வெளியிடுமாறும் அமெரிக்காவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது...
அண்மையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தம் பெயரை களங்கப்படுத்தும் விதத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டமை தொடர்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
போராட்டத்தில் இருந்து ஆயுத வன்முறையினால் எதுவும் சாதிக்கமுடியாது என்பதையுணர்ந்து ஜனநாயக வழிக்கு திரும்பி அதன் மீது நம்பிக்கைகொண்டு அரசியலில் பிரவேசித்து இன்று இந்த நாட்டின் மாபெரும் அரசியல் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராகவும் பிரதியமைச்சர்களில் ஒருவராகவும் உள்ளேன்.
இவ்வாறான நிலையில் அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை எம்மை கடும் கவலைக்குள்ளாக்கியுள்ளதுடன் எனது நற்பெயருக்கு மக்கள் மத்தியில் களங்கத்தை உண்டுபண்ணுபவையாகவும் உள்ளது.
அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் எதுவித அசம்பாவிதங்களும் அற்ற நிலையில் மக்கள் மிகவும் ஒரு சந்தோஷமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை அங்கு சென்றுவரும் எவரும் மறுக்கமாட்டார்கள். இவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்துவதில் நான் மிகவும் விழிப்புடன் செயற்பட்டுவருகின்றேன்.
கடந்த காலத்தில் எமது மாகாணத்தில் இடம்பெற்றுவந்த கடத்தல் மற்றும் குற்றச்செயல்களை நிறுத்துவதற்கு கடும் நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் உத்தரவு விடுத்த நிலையில் இன்று அந்த மக்கள் எதுவித அசம்பாவிதங்களும் இன்றி நிம்மதி பெருமூச்சுவிடுகின்றனர்.
இவ்வாறான நிலையில் எதுவித ஆதாரமும் இன்றி இவ்வாறு உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவரின் பெயருக்கு எதுவித ஆதாரமும் இன்றி களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிடுவதை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நிறுத்தவேண்டும் என கோரிக்கைவிடுக்கின்றேன்.
அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் தொடர்பில் நாங்கள் எதுவித விமர்சனமும் செய்யாத நிலையில் எமது நாட்டில் உள்ள அமைச்சர்கள் மீது பொய்யான தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் அமெரிக்கா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் என் தொடர்பான எதுவித தகவலும் இல்லையென்பதையும் கவனத்தில்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’