வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 மார்ச், 2011

ஜெயலலிதா ஏன் இப்படி செய்தார்?-ஏன் திடீரென பணிந்தார்?

கூட்டணிக் கட்சியினரை கொஞ்சம் கூட மதிக்காமல், அவர்களது அரசியல் எதிர்காலம், அந்தக் கட்சிகளின் சென்டிமெண்ட்கள், அவர்களது அரசியல் தியாகங்கள்,அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் அனைவரையும் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் வகையில் தனது வேட்பாளர் பட்டியலை தன்னிச்சையாக வெளியிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

ஜெயலலிதாவைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இது நிச்சயம் அதிர்ச்சி தந்திருக்கவே முடியாது. அவரது கடந்த கால செயல்களை மறந்து போனவர்களுக்கு மட்டுமே இது அதிர்ச்சியைத் தந்திருக்கும்.
வழக்கமாகவே யாரையும் மதிக்கத் தெரியாத ஜெயலலிதாவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வந்த ஒரு பிரிவு மீடியாக்கள், அவர் இப்போது செய்த தவறையும் மூடி மறைக்கவே முயன்று வருகின்றனவே தவிர, அவரது தவறை சுட்டிக் காட்ட துணியவில்லை. இது நிச்சயமாக ஜெயலலிதாவுக்கு அவர்கள் செய்யும் நன்மை அல்ல, கெடுதல் தான் என்பதை உணர வேண்டும்.
குறிப்பாக வட இந்திய டிவி சேனல்களில் நேற்று முன்தினம் முதல் அதிமுக கூட்டணியில் நடந்து வரும் குழப்படிகள் குறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட செய்தி வெளியாகவில்லை.
இந் நிலையில் ஜெயலலிதா செய்த தவறுக்கு சசிகலா தரப்பு மீது பழி போடப்பட்டு செய்திகள் வந்துள்ளன.
கூட்டணியில் ஆரம்பித்து இந்த முறை தேர்தல் தொடர்பாக ஜெயலலிதாவை இயக்கியது நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்த ஒரு பத்திரிக்கையாளர் தான் என்பதை தமிழ்நாட்டில் சின்னக் குழந்தையும் சொல்லும். அவரது அட்வைஸ்படியே அனைத்து முடிவுகளையும் எடுத்த ஜெயலலிதா இந்த முறை சசிகலா தரப்பு சொன்ன எதையும் காதிலேயே வாங்கவில்லை என்று தான் தகவல்கள் வந்தன.
ஆனால், ஜெயலலிதாவின் இப்போதைய இந்த எடுத்தேன் கவிழ்த்தேன் செயலுக்கு சசிகலாவின் உறவினர் ஒருவர் தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்க ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் சித்தப்பாவின் மாப்பிள்ளையான ராவணன் என்பவர் உதவினாராம். இவரது உதவியோடு ஜெயலலிதா 60 முதல் 70 இடங்களுக்கு ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருந்தாராம்.
இது தவிர சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், அக்காள் மகன் டி.டி.வி. தினகரன், உறவினர் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரின் சிபாரிசுடன் கூடிய ஒரு பட்டியலையும் தயாரித்து வைத்திருந்தாராம் ராவணன். இந்தப் பட்டியலில் இடம் பெற்ற தொகுதிகளில் பல கூட்டணிக் கட்சிகளுக்குத் தரப்பட்டவையாம்.
இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு 'பட்டியலை வெளியிடுங்கள்' என்று ஜெயலலிதாவிடமிருந்து உத்தரவு வந்ததாம்.
உடனே, ஜெயலலிதா தயாரித்து வைத்திருந்த பட்டியலை வெளியிடாமல், சசிகலா உறவினர்கள் சிபாரிசுடன் உருவாக்கப்பட்ட பட்டியலை வெளியிட்டுவிட்டார்களாம். இதனால் தான் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்களாம். அதாவது ஜெயலலிதாவுக்கே தெரியாத ஒரு பட்டியலை அதிமுக வெளியிட்டுவிட்டது என்பது தான் அதிமுக தரப்பு கசிய விட்டுள்ள செய்திகளின் சாரம்சம்.
இந்தத் தகவலை கூட்டணிக் கட்சிகள் நம்பி, ''அடடா.. அப்படியாம்மா நடந்துச்சு.. நாங்க உங்க மேல போயி சந்தேகப்பட்டுட்டோமே'' என்று உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர்விட்டு, அப்படியே சமாதானமாகிவிடும் என்று அதிமுக நம்பியதாகத் தெரிகிறது.
அப்படியே கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு காதுக்கு இரண்டு முழம் பூவை 'மாபெரும் தலைவர்களான' ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் மூலம் அதிமுக அனுப்பி வைத்திருக்கலாம்.)
இந்தச் செய்தியை கூட்டணித் தலைவர்கள் நம்பாத நிலையில் தான், அதிமுக தானாகவே இந்தக் கட்சியினருக்கு மீண்டும் நட்புக் கரம் நீ்ட்டியது. நீங்கள் கேட்கும் தொகுதிகளை விட்டுத் தர ரெடி என்று சிக்னல் அனுப்பியதையடுத்து இவர்களுக்கும் அதிமுகவுக்கும் இடையே ரகசிய மற்றும் வெளிப்படையான பேச்சுக்கள் ஆரம்பமாயின.
நேற்று முன் தினம் பாய்ந்த ஜெயலலிதா திடீரென பணிந்து போக முக்கியக் காரணம் விஜய்காந்த் தான் என்கிறார்கள்.
நாம் விரும்பும் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டால் இடதுசாரிகளும், புதிய தமிழகமும், பார்வர்ட் பிளாக்கும் என்ன செய்துவிடப் போகிறார்கள்.. ஒருவர் பின் ஒருவராக நம்மிடம் வந்து ''அம்மா அந்தத் தொகுதியை விட்டுக் கொடுங்கள்.. இந்தத் தொகுதியை விட்டுக் கொடுங்கள்'' என்று கெஞ்சுவார்கள். அதில் சிலவற்றை விட்டுத் தந்தால் நாம் தந்ததை வாங்கிக் கொண்டு வாயை மூடிக் கொண்டு போய் விடுவார்கள் என்று தான் ஜெயலலிதா நினைத்திருந்தார்.
விஜய்காந்த் என்னொரு சக்தி அந்த இடத்தில் இருந்திருக்காவிட்டால் ஜெயலலிதா நினைத்து தான் நடந்திருக்கும். ஆனால், ஜெயலலிதாவால் முதுகில் குத்தப்பட்டவுடன் இடதுசாரிகளும், அவர்களுடன் பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகியவையும் விஜய்காந்தின் அலுவலகத்தில் ஓடிப் போய் தஞ்சம் புகுந்து கொண்டு, 'மூன்றாவது அணி அமைப்போம்' என்று மிரட்டுவார்கள் என்று ஜெயலலிதா கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
எதிர்காலத்தில் விஜய்காந்த் மூலம் ஜெயலலிதா சந்திக்கப் போகும் அதிரடியான சவால்களுக்கு இந்த சம்பவம் ஒரு ஆரம்பம் தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இனி எந்தக் கட்சியையும் ஜெயலலிதாவால் உதாசீனப்படுத்த முடியாது என்பதற்கு உதாரணம் தான் வைகோவுக்கும் சேர்த்து அதிமுக சமாதானக் கொடியை ஆட்டியது என்கிறார்கள். சமாதானப் போக வேண்டுமானால் தான் கோரும் தொகுதிகளை தனக்குத் தருவதோடு, மதிமுகவையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என நிபந்தனை போட்டுள்ளார் விஜய்காந்த் என்கிறார்கள்.
இதனால் மிரட்டல் விடுத்த கட்சிகளுக்கு கேட்கும் தொகுதிகளைக் கொடுப்பதோடு, மதிமுகவுக்கும் கூட்டணியில் இடம் தருவதாக அறிவிக்க வேண்டிய நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டுள்ளார்.
இப்போது கட்சிகளுடன் மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை ஜெயலலிதா தொடங்கியுள்ளதன் மூலம் பெரும் குழப்பத்தில் உள்ளவர்கள் அதிமுக வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்கள் தான். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போக இவர்களில் எத்தனை பேருக்கு உண்மையிலேயே சீட் கிடைக்குமோ.. எத்தனை பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து காணாமல் போகுமோ.. எத்தனை பேர் தொகுதி மாற வேண்டியிருக்குமோ என்பது தெரியவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’