வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

கூட்டணிக் கட்சிகளின் முரண்டு-குழப்பத்தில் திமுக, அதிமுக

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. ஆனால் தற்போது ஒரு விஷயத்தில் இரு கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. அது - கூட்டணிக் கட்சிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களால் குழம்பிப் போயிருப்பது.

தேர்தலுக்கு முன்பு வரை காங்கிரஸ் தங்களுடன் வரும் என்பது போல பேசிக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ஆனால் காங்கிரஸ் உடனே அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டது. இதனால் அதிமுக தரப்பு சற்றே சோர்வடைந்தது. ஆனால் அதற்கு மருந்தாய் தேமுதிக, அதிமுக தரப்பில் இணைய ஆர்வம் காட்டியது. இதையடுத்து விறுவிறுவென பேச்சுவார்த்தைகள் முடுக்கி விடப்பட்டன. கிட்டத்தட்ட கூட்டணி முடிவாகி விட்டதாக கூட செய்திகள் வெளியாகின.
சேலத்தில் விஜயகாந்த் கூட்டிய பிரமாண்ட கூட்டத்தில் கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்களும் கூட அதைத்தான் எதிர்பார்த்தனர். ஆனால் யாருக்கும் புரியாமலேயே கடைசி வரை பேசி விட்டுக் கிளம்பினார் கேப்டன்.
இதற்கு என்ன காரணம் என்று யோசித்தபோது, தேமுதிக தரப்பிலிருந்து ஏகப்பட்ட கண்டிஷன்களை 'அம்மா'விடம் வைத்ததாகவும், அதற்கு 'அம்மா' இறங்கி வராததால் பேரம் படியாமல் இழுபறியாகி இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிமிடம் வரை தேமுதிக, எங்கு போகப் போகிறது என்பது யாருக்குமே தெரியவில்லை. இது அதிமுக தரப்பில் நிலவி வரும் பெரும் குழப்பம்.
திமுக தரப்பில் போய் பார்த்தால் காங்கிரஸ் மூலமாக பெரும் சிக்கல் வந்து நிற்கிறது. ஏகப்பட்ட தொகுதிகளை அவர்கள் கேட்பதாலும், பேச்சுவார்த்தைக்கான குழுவை இன்னும் அறிவிக்காமல் வழக்கம் போல விளக்கெண்ணெய் தனமாக மந்தகதியில் இருப்பதாலும் அடுத்த அடியை எடுத்து வைக்காமல் காத்திருக்கிறது திமுக.
மறுபக்கம் பாமகவால் வந்துள்ள குழப்பம். கூட்டணியில் பாமகவை சேர்ப்பதாக முதல்வர் அவராகவே அறிவித்தார். அதை வேகம் வேகமாக ராமதாஸ் மறுத்தார். ஆனால் இருவருக்கும் அதிர்ச்சி அளிப்பது போல, சோனியா காந்தி ஒரே போடாக துரோகி பாமக வேண்டவே வேண்டாம் என்று கூறி விட்டார்.
இதனால் பாமகவை சேர்க்கும் கருணாநிதியின் திட்டம் கேள்விக்குறியாகி விட்டது. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, திமுகவை மலை போல நம்பியிருந்த பாமகவின் நிலை பெரும் குளறுபடியாகியுள்ளது.
சரி, அதிமுக பக்கம் போகலாம் என்றால், தேமுதிக, மதிமுகவுக்கு போக மீதமிருக்கிற இடங்களைத்தான் ஜெயலலிதா கொடுப்பார் என்று எடுத்த எடுப்பிலேயே எட்டிக்காய் போல பதில் வருகிறதாம்.
இதனால் எங்கு போவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது பாமக. அதேசமயம், கடைசி நேரத்தில் ஏதாவது சில கட்சிகளை சேர்த்துக் கொண்டு தனித்துப் புது அணியை ஆரம்பித்து போட்டியிட பாமக முடிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அதேபோல அதிமுக தரப்பிடமிருந்து சாதகமான பதில் வராவிட்டால் தனித்துப் போட்டியிட தேமுதிகவும் தயாராகி வருகிறதாம். தனித்துப் போட்டியிடுவது தங்களுக்குப் புதிதல்ல என்று விஜயகாந்த் நினைக்கிறாராம். ஆனால் கட்சியினர் கூட்டணியை வலியுறுத்தி வருவதால்தான் கூட்டணி குறித்த பேச்சில் அவர் ஆர்வம் காட்டி வருகிறாராம்.
இப்படி முக்கியக் கட்சிகளின் இழுபறியால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுமே கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளன. இருப்பினும் இந்த சிக்கலையும் சமாளித்து இப்போது முன்னணியில் நடை போட்டு வருவது அதிமுகதான். தனது பிற கூட்டணிக் கட்சிகளுடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தையை அந்தக் கட்சி முடித்து விட்டது. திமுக தரப்பில்தான் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் கம்மென்று உள்ளனர்.
அரசியலாச்சே, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’