எகிப்து மற்றும் துனீஷியாவில் நடைபெற்ற நிகழ்வுகளின் காரணமாக ஏற்பட்ட ஒரு குழப்ப நிலைமையில் மத்திய கிழக்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமாதான நடவடிக்கைகளுக்கு பின்னடைவு ஏற்படக் கூடும் என பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு சமாதான நடவடிக்கைகளின் உத்வேகம் குறைந்து போகக்கூடும் என்கிற நியாயமான அச்சங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள வில்லியம் ஹேக், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்திடமிருந்து ஒரு தைரியமான தலைமை தேவை எனவும் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் பெரும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. எகிப்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகள் அந்தப் பகுதியின் அரசியலை ஆழமாக மாற்றியமைக்கக் கூடும்.
எனவே அங்கு நடக்கும் குழப்பங்களில் இஸ்ரேல் பாலத்தீன அமைதி பேச்சுவார்த்தைகள் கவனிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டுவிடலாம் என பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் அச்சப்படுவதில் ஆச்சரியம் இல்லை.
அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் கீழ் எகிப்து அமெரிக்க வெளியுறவு கொள்கையின் ஒரு பலமான அரணாகவும், அந்தப் பிராந்தியம் முழுவதும் அமெரிக்காவின் அணுகுமுறைக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருந்துள்ளது
மேற்குலக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து தமக்கு ஆதரவளிப்பவர்களுடனேயே அமெரிக்கா தன்னை ஒரு பங்காளியாக இணைத்துக் கொள்ள விழையும்.
எனினும் தமது பங்காளியாக இருக்கும் பல அரபு நாடுகளில் ஜனநாயகத் தன்மை இல்லாதது குறித்து அமெரிக்காவில் கவலைகளும் இருந்து வந்துள்ளன. ஆனாலும் அமெரிக்காவின் கொள்கை என்பது அடிப்படையில் யதார்த்தத்துடனும் குறுகிய கால கண்ணோட்டத்தை கொண்டதுமே ஆகும்.
அமெரிக்காவின் கேந்திர ரீதியான நலன்கள் என்பது அப்பகுதியில் நிலவும் அடக்குமுறை ஆட்சி மற்றும் ஜனநாயத்தன்மை இல்லாத நிலை என்கிற கவலைகளையும் கடந்த ஒன்று.
அப்பிராந்தியத்தில் சவுதி அரேபியாவிலிருந்து வளைகுடாப் பகுதியைத் தாண்டி எகிப்து வரை, ஏன் இஸ்ரேலை உள்ளடக்கிய பகுதிகளில் கூட வளர்ந்து வரும் இரானின் செல்வாக்கின் காரணமாக, அதிகாரபூர்வமற்ற ஒரு கூட்டணியை அமெரிக்கா அமைக்க வழி செய்தது.
ஆனால் எகிப்தில் இடம் பெற்ற நிகழ்வுகள் இப்படியான கூட்டணியை அச்சுறுத்தியுள்ளது. இதன் காரணமாக சவுதி அரேபியர்கள் கவலையடைந்துள்ளதில் ஆச்சரியமில்லை. இஸ்ரேலியர்கள் கூட எகிப்துடனான தமது அமைதி உடன்படிக்கையின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’