வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 10 பிப்ரவரி, 2011

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (8) வெள்ள அனர்த்தம் தொடர்பான ஒத்துவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் ஆற்றிய உரை.
கௌரவ சபாநாயகர் அவர்களே

வடக்கு. கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட விடயம் இன்று இந்தச் சபையில் கௌரவ உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. உண்மையிலே வடக்கு கிழக்குப் பகுதி கடந்த முப்பது வருட காலமாக யுத்தத்தை எதிர்கொண்டு மோசமான பாதிப்புக்குள்ளாகிய மாகாணங்கள் என்ற அடிப்படையில் இந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட இந்த இயற்கை அனர்த்தம் அவர்களை மேலும் துன்பத்துக்குள்ளாக்கி இருப்பதை எல்லோரும் அறிவர். இந்த இயற்கை அழிவு குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே உள்ள மக்களை மிகவும் மோசமாகப் பாதித்ததை நாம் எல்லோரும் மிகவும் வேதனையுடன் பார்க்கின்றோம். இந்த வெள்ளப் பாதிப்பு 13 இலட்சம் மக்களை அநாதரவான நிலைமைக்கு அல்லது பாதிப்புக்குள்ளான நிலைமைக்குத் தள்ளியிருக்கின்றது. ஆகவே இந்த நிலைமையைச் சீர்செய்வதற்கு நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அந்த மக்களுக்கு உதவ வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. அந்த வகையில் கௌரவ அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அவர்கள் தனது அமைச்சுக்கு ஊடாகவும் மற்றும் அந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளும் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டுக் கொண்டிருப்பது பாராட்டுதலுக்குரியது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களும் மற்றும் பொலன்னறுவை மொனராகலை போன்ற மாவட்டங்களும் தான் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு குளங்கள் எல்லாம் உடைப்பெடுத்து மக்களின் வாழ்விடங்களையும் அவர்களது விவசாய நிலங்களையும் அழித்திருக்கின்றன. இலட்சக் கணக்கான மக்கள் அகதி முகாம்களுக்கும் மற்றும் மேட்டு நிலப் பகுதிகளுக்கும் இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். வட மாகாணத்தில் வவுனியா மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வவுனியாவிலே கிட்டத்தட்ட 24 617 குடும்பங்களைச் சேர்ந்த 95000 பேர் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் 3733 குடும்பங்களைச் சேர்ந்த 14895 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக கிளிநொச்சி மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம் போன்ற மாவட்டங்களே யுத்தத்தினாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும். அம் மாவட்டத்திலுள்ள மக்கள் தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து மீண்டு தமது மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த அழிவு மிகவும் கவலையை அளிப்பதாக இருக்கின்றது. வட மாகாணத்திலுள்ள மக்கள் மிகுந்த துன்பத்தின் மத்தியிலே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திலே கிட்டத்தட்ட 18 744 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச்செய்கையும் முல்லைத்தீவு மாவட்டத்திலே 12 110 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச்செய்கையும் வவுனியா மாவட்டத்திலே 23 225 ஏக்கர் பரப்பிலே மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச்செய்கையும் மன்னார் மாவட்டத்தில் இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச்செய்கையும் அறுவடைக்குத் தயாராகிய நிலையில் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றது. ஆகவே அனர்த்த நிவாரண அமைச்சும் அரசும் இணைந்து பாதிக்கப்பட்டுள்ள அவ் விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் முழுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கேனும் தொடர்ந்தேர்ச்சியாக உலர் உணவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

ஏனெனில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கு 6 மாத காலத்திற்கு வழங்கப்படும் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த உலர் உணவு விநியோகம் இப்பொழுது 6 மாத காலம் கடந்துள்ளதன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது ஏற்பட்டுள்ள இயற்கை வெள்ள அழிவுகள் அந்த மக்கள் மீளக்குடியேறி தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாத சூழலை உருவாக்கி இருப்பதால் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பக் கூடிய சூழல் வரும் வரை அரசு தொடர்ந்தேர்ச்சியாக அவர்களுக்குரிய உலர் உணவுகளை வழங்க முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளை நான் இச்சபையின் முன்வைத்து விடைபெறுகின்றேன்.

நன்றி




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’