அரசியல் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை சந்திக்கவுள்ளது.
அலரி மாளிகையில் இந்தக் குழுக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அரசியல் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட இக்குழுவின் அங்கத்தவர்களை 10 ஆம் திகதி கூட்டத்துக்கு வருமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இந்தக்குழுவில் அரசாங்கத்தின் சார்பில் முன்னாள் பிரதமரும் அமைச்சருமான ரட்னசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்களான ஜி.எல். பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, ஆகியோர் இடம்பெற்றுள்ள அதன் தலைவர் இரா. சம்பந்தன், எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, எம்.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
திங்கட்கிழமை நடைபெறும் இந்தக்கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கலந்து கொள்ள மாட்டார். இருதய சுகவீனம காரணமாக அவர் இந்தியாவில் சிகிச்சை பெற்று வருவதனால் ஏனைய மூன்று எம்.பிக்களுமே இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் சந்தித்து பேசியிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போதே அரசியல் தீர்வு குறித்து ஆராய்வதற்கு இருதரப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன்படியே இக்குழுவுக்கான பிரதிநிதிகள் பெயரிடப்பட்டிருந்தனர்.
இதேவேளை அரசியல் தீர்வு தொடர்பில் ஒருமித்த கருத்தைப் பெறுவதற்காக தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து அமைத்துள்ள உபகுழுவும் விரைவில் கூடவுள்ளது.
இக்குழுவில் அரசாங்கத்தின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்த சங்கரி, புளொட் அமைப்பின் சித்தார்த்தன், ஈ.பி.டி.பி.யின் முன்னாள் எம்.பி. இராசமாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம். சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். இக்குழுவும் இன்னும் சில தினங்களுக்குள் கூடவுள்ளது.
வடக்கு கிழக்கில் சகல சபைகளுக்கும் போட்டியிடத் தீர்மானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு நேற்று கொழும்பில் கூடி உள்ளூராட்சித் தேர்தல்தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளது. கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனதிராஜாவின் தலமையில் நடைபெற்ற இந்தக் குழுக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் சகல இடங்களிலும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைவிட தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிட விரும்பினால் கூட்டமைப்பின் அடிப்படைக்கொள்கைகளை ஏற்று வரவேண்டுமென்றும் அதன்பின்னர் அரங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு முயற்சிக்கக் கூடாது என்று அறிவிப்பது எனவும் இக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
உள்ளூராட்சித் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சித் தலைவர்கள் தெரிவித்துவரும் கருத்துக்கள் தொடர்பாக நேற்றைய கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் தெரிவித்தார். ___
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’