அரசியல் தீர்வானது 13 ஆவது திருத்தத்திற்கு அதிகமான அதிகாரங்களுடன் அமையும். ஆனாலும், மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது. அரசியல் கட்சிகள் முன்வைக்கின்ற யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்துக் கட்சிகளுடனான இணக்கப்பாட்டின் அடிப் படையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தெரிவித்துள் ளார்.
அரசியல் தீர்வுக்கான கால எல்லையினை கூறமுடியாது. மாகாண அரசாங்கங்களுடன் அதிகாரங்களை பகிர்ந்து கொள்கின்ற சாத்தியக்கூறுகள் அதிகமாகவே காணப்படுகின்றன. ஆனால் பொலிஸ் அதிகாரங்கள் எவ்வகையிலும், பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது. பொலிஸ் அதிகாரங்கள், மாகாணசபைகளுக்கு வழங்கப்பட மாட்டாது என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் நான் தெரிவித்துள்ளேன். அவர்கள் யதார்த்தத்தை உணர்ந்தவர்களாக அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களை சந்தித்த ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது:
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்துமாறு கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். இலங்கை கடற்படையினரின் தரவுகளுக்கு அமைவாக அவ்வாறனதோர் தாக்குதல் சம்பவம் இடம் பெறவில்லையென தெரிகின்ற போதிலும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் கலந்துரையாடல்கள் இடம் பெற்று வருகின்றன. எமக்கிடையில் முன்னர் சில ஏற்பாடுகள் இருந்தன. எனினும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அமைதிச்சூழல் அடிப்படையில் இத்தகைய ஏற்பாடுகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
மோதல்கள் இடம் பெற்ற காலப்பகுதியில் வடபகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை மீனவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது அவர்களால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடிகிறது. அந்தவகையில் இரு நாடுகளின் மீனவர்களுக்குமிடையில் புரிந்துணர்வின்மையும் மோதல்களும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இவ்வாறான விவகாரங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தமக்கிடையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டியமை முக்கியமானதாகும். இரு நாடுகளும் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட கூட்டறிக்கைக்கு இசைவாகவே இந்த செயற்பாடுகள் அமைய வேண்டும். இந்திய அரசினால் இலங்கைத் தூதுவர் அழைத்து விளக்கம் கோரப்பட்டுள்ளார். இந்திய அரசாங்கம் உட்பட எந்தவொரு அரசாங்கத்திற்கும் அவ்வாறான உரிமை காணப்படுகின்றது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறும் இதனை அத்தியாவசிய சேவையாக கருதி செயற்படுத்துமாறும் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன். மோசமான காலநிலை காரணமாக மட்டக்களப்பிற்கான எனது விஜயம் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருகின்றேன். இந்தியா வெள்ள நிவாரண உதவி வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கதாகும். இலங்கை வேண்டுகோள் விடுக்காத நிலையிலேயே இந்தியா இலங்கைக்கு உதவ முன்வந்தது.
மேற்குலக நாடுகளுடனான உறவு தொடர்ந்தும் வலுவாகவே உள்ளது. சில நாடுகளில் இலங்கை தொடர்பான சாதகமான போக்குக்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. குடிவரவு தொடர்பான கனடாவின் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்பட்டுள்ள கொள்கைகள், மற்றும் சுவிர்சர்லாந்து, ஜேர்மனி, போன்ற நாடுகளில் விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கதாகும்.
புலம் பெயர்ந்த மக்களுடனான உறவினை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஏற்கனவே புலம் பெயர்ந்த மக்களில் சிலர் இங்கு அழைக்கப்பட்டு உண்மை நிலைமை குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சில தரப்பினர் எதிர்காலத்திலும் குழப்பங்களை ஏற்படுத்த முனையக்கூடும். அத்தகையவர்கள் வேறு நாடுகளின் குடியுரிமை பெற்றவர்களாவர்.
விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். 30 வருட காலமாக பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் பின்னர் 6 மாதமளவிளான குறுகிய காலப்பகுதியில் முன்னாள் போராளிகளை விடுவிக்க முடிந்துள்ளமை இலகுவான காரியமல்ல. வேறெந்த நாட்டிலும், இவ்வாறான வெற்றியை ஈட்ட முடிந்ததில்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் விடயத்தில் சான்றுகள் இருந்தால் அதனடிப்படையில் அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படும்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’