கர்நாடக மாநில முதல்வராக யதியூரப்பா தொடருவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. அவர் மீது எழுந்துள்ள ஊழல் புகார்களை அடுத்து அவர் பதவி விலக வேண்டும் என பல்தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன.
இந்நிலையில் அது குறித்து விவாதிப்பதற்காக பாரதிய கட்சியின் தலைமை யதியூரப்பாவை டில்லிக்கு அழைத்தது. இந்தக் கூட்டத்தை அடுத்து அவர் கர்நாடக மாநிலத்தின் முதல்வராகத் தொடருவார் என கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் நிர்மலா சீத்தாராமன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
தொலைத் தொடர்புத் துறையில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஆ ராசா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்த பா ஜ க, யதியூரப்பா விடயத்தில் இரட்டை நிலையை கையாள்கிறது என்று கூறப்படும் குற்றச்சாட்டையும் அக்கட்சி நிராகரித்துள்ளது.
கர்நாடக முதல்வர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாநில அரசு ஒரு நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அதன் முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டும் எனவும் பா ஜ க வின் பேச்சாளர் கூறுகிறார்.
ராசா விடயத்தில் இந்தியாவின் தலைமை கணக்காயரின் அறிக்கை அவர் மீது குற்றம் இருப்பதாக கூறியதை அடுத்தே, தமது கட்சி அவர் பதவி விலக வேண்டும் என்று கோரியதாகவும், யதியூரப்பா மீது அப்படியான அறிக்கையோ அல்லது அவர் மீது குற்றம் உள்ளாதாக தெரிவிக்கும் நீதி விசாரணை முடிவோ வராத நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்கிற விடயத்தில் பா ஜ க இரட்டை நிலைப்பாடை எடுக்கிறது என்பதையும் நிர்மலா சீத்தாராமன் மறுக்கிறார்.
ஆந்திர முதல்வர் பதவி விலகினார்
இதனிடையே ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் பதவியிலிருந்து கே. ரோசைய்யா திடீரென்று விலகியுள்ளார். தமது ராஜிநாமா கடிதத்தை மாநில ஆளுநரிடம் அவர் அளித்துள்ளார்.
தனது உடல்நிலையை காரணம் காட்டி ரோசைய்யா பதவியிலிருந்து விலகியுள்ளார். வயது மற்றும் சூழ்நிலையின் காரணமாக அவரால் முதல்வர் பதவியில் தாக்குபிடிக்க முடியவில்லை என்பதால் அதிலிருந்து விலக கட்சி மேலிடத்தின் அனுமதியை அவர் கோரியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உடல் நிலை காரணமாக ரோசைய்யா பதவி விலகுவதாகக் கூறினாலும், உண்மையான காரணம் அதுவல்ல என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது என தமிழோசையின் புதுடில்லிச் செய்தியாளர் கூறுகிறார்.
ஆந்திர பிரதேசத்தின் அடுத்த முதலமைச்சரை தேர்தெடுக்கும் நடவடிக்கைகள் ஹைதராபாதில் தொடங்கியுள்ளன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’