இந்தியாவில், அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவாணின் ராஜிநாமாவை கட்சி மேலிடம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
அதேபோல், காமன்வெல்த் போட்டிகளில் நடந்த முறைகேடுகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படும் சுரேஷ் கல்மாதி, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிச் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை காலை துவங்கிய நிலையில், அதற்கு சில மணி நேரம் முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் திவேதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அசோக் சவாணின் ராஜிநாமா ஏற்கப்பட்டுள்ளது என்றும், மாநில ஆளுநரிடம் தனது ராஜிநாமை சமர்ப்பிக்குமாறு கட்சி மேலிடம் அவருக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் ஜனார்தன் திவேதி தெரிவித்தார்.
அசோக் சவாணைப் பொருத்தவரை, அவர் தனது அதிகாரத்தை உறவினர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினார் என்பது குற்றச்சாட்டு. தெற்கு மும்பையில் மிக முக்கிய இடமான கொலாபாவில், மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டப்பட்டுள்ளது. அது, கார்கில் போரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்காகக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் குடியிருப்பில், தனது மாமியார் உள்பட சில உறவினர்களுக்கு வீடுகளை ஒதுக்க சவாண் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, கடந்த மாத இறுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த அசோக் சவாண், தான் ராஜிநாமா செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்கள் தனது பயணத்தின் முதல் கட்டமாக நேரடியாக மும்பை வர வேண்டியிருந்ததால், அந்த நேரத்தில், மாநிலத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதை காங்கிரஸ் மேலிடம் தள்ளிப் போட்டது.
ராஜாவும் பதவி விலக வேண்டும்
ஒபாமா அவர்கள், இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை இந்தோனேஷியா புறப்பட்ட நிலையில், காங்கிரஸ் மேலிடம் தனது முடிவை செயல்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதற்காக, பிரணாப் முகர்ஜியும், ஏ.கே. ஏண்டனியும் மும்பை புறப்பட்டுச் சென்றார்கள்.
அதே நேரத்தில், மும்பை ஆதர்ஷ் வீட்டுவசததித் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாஜக, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
அதேபோல், 2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை தொலைத் தொடர்பு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், அந்தத் துறைக்குப் பொறுப்பான திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ. ராசாவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து, மக்களவையில் இடதுசாரிக் கட்சிகளும், மாநிலங்களவையில் அதிமுகவும் ஒத்திவைப்புத் தீர்மானம் தொடர்பாக நோட்டீஸ் கொடுத்துள்ளன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’