மாவட்ட மட்ட நிகழ்வுகள் நல்லூர் பிரதேச செயலகத்தில் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்றது.
அங்கு தேசியக் கொடியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண கொடியினை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களும் மாவட்டக் கொடியினை அரச அதிபரும் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து அரச அதிபர் தனது தலைமையுரையில்
சுற்றாடல் அமைச்சின் அனுசரணையுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 2வது பதவியேற்பு நிகழ்வையும் அவரது பிறந்த நாளையும் ஒட்டி இன்று மாவட்டம் முழுதுமாக தேசத்திற்கு நிழல் திட்டத்தின் கீழ் பயன்தரு மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
அதேவேளை யாழ் மாவட்டத்தில் மேலும் மரக்கன்றுகளை நடும் பாரிய வேலைத்திட்டத்திற்கென 10 மில்லியன் ரூபாய்களை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒதுக்கீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.
அங்கு ஆளுநர் சந்திரசிறி அவர்கள் உரையாற்றும் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற இம்மரநடுகைத் திட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கி வருகின்ற ஒத்துழைப்புக்கும் ஒத்தாசைக்கும் நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து நல்லூர் பிரதேச வளாகத்தில் சித்திரை வேம்பு மரக்கன்றுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் முற்பகல் 10.07 மணிக்கு நாட்டி வைத்து திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். அதன் பின்னர் ஏனைய அதிதிகளால் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர் பெனாண்டோ நல்லூர் பிரதேச செயலக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் உள்ளிட்ட துறைசார்ந்த பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
தேசத்திற்கு நிழல் தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வு அச்சுவேலியிலும் இன்று முன்னெடுக்கப்பட்டது.
அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பயன்தரு மரக்கன்றுகளை அமைச்சர் அவர்களும் ஆளுநர் அவர்களும் நாட்டி வைத்தனர்.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு மற்றும் பிறந்தநாளையொட்டிய சுற்றாடல் அமைச்சு மற்றும் அனைத்து மாகாண சபைகளும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வரும் ஜனாதிபதிக்கு மரியாதை தேசியமரநடுகை வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பயன்தரு மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்படவுள்ளன.
இம்மரக்கன்றுகள் பாடசாலைகள் வீதிகள் வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களில் நாட்டப்படுவதுடன் 04 நாட்களுக்குள் முழுமையாக நாட்டி முடிக்கப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம்மரநடுகைத் திட்டத்தை இன்று குடாநாடு தழுவிய பாடசாலைகள் நிறுவனங்கள் பொது ஸ்தாபனங்களும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’