யாழ். நகர் கிழக்கிலுள்ள குடியேற்ற கிராமமான நெடுங்குளத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அம்மக்களின் காணிப்பிரச்சினைகள் மற்றும் குடியிருப்பு பிரச்சினைகள் தொடர்பாக நேரில் கண்டறிந்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன]
தமது காணி உரிமம் காரணமாக தாம் அரசாங்கத்தினதும் உலக வங்கியினதும் வீட்டுத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என அக்கிராம மக்கள் தெரிவித்ததை அடுத்து அது தொடர்பாக ஆராய்வதற்காகவே அக்கிராமத்திற்கு அமைச்சரவர்கள் நேரடியாக விஜயத்தினை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது யாழ். பிரதேச செயலாளர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ யாழ். மாநகர ஆணையாளர் மு.சரவணபவ நகர அபிவிருத்தி அதிகார சபை பிரதிநிதிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகியோரும் உடனிருந்தனர்.
ஜே 61 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள நெடுங்குளம் மாதர் கிராமிய அபிவிருத்தி சங்க கட்டடத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் தனி ஒருவரின் சொந்த காணியாகிய 110 பரப்பு மற்றும் 90 பரப்பு ஆகிய அளவு கொண்ட நிலப்பகுதியில் இருந்து மேற்படி குடியேற்ற மக்கள் தமது காணிகளை கொள்வனவு செய்திருந்தமை கண்டறியப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டதிட்டத்தின் பிரகாரம் 39.5 பரப்பு அளவுடைய தனியொருவரின் காணியானது பிரிக்கப்படும்போது அதில் 10 பரப்பானது பொது நோக்கு தேவைக்கென வழங்கப்பட வேண்டும் என்பதுடன் வீடுகளுக்கான வீதி அமைப்பானது உரிய அளவுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற நடைமுறை இங்கு பின்பற்றப்பட்டிருக்கவில்லை என்ற விடயம் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே அவர்கள் மாநகர சோலை வரி செலுத்த அனுமதி வழங்கப்படவில்லை என ஆணையாளர் தெரியப்படுத்தினார்.
இக்கலந்துரையாடலின் போது அங்கு உரையாற்றிய அமைச்சரவர்கள் யாழ். பிரதேச செயலாளர் யாழ். மாநகர சபை நிர்வாகம் உறுதி தயாரித்த சட்டத்தரணி மற்றும் நில அளவையாளர் ஆகியோரும் குடியிருப்பாளர்களும் இணைந்து ஓர் சுமுகமான முடிவிற்கு வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதன்காரணமாக தேவையற்ற சிக்கல்களைத் தவிர்த்து சட்டதிட்டங்களுக்கமைய பொது நோக்கு மற்றும் வீதி அமைப்பு உள்ளிட்ட எல்லை நிர்ணயம் செய்வதன் மூலம் அரசாங்கமும் மாநகரசபை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன வழங்கும் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத்தெரிவித்த அமைச்சரவர்கள் தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் நெடுங்குளம் குடியேற்ற மக்களுக்கு உறுதியளித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’