
அதன் பின்னர் புலிகள் இயக்கத்தை வெளிநாடுகளில் இயங்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன.
வன்னியில் புலிகள் அமைப்பு வலுவாக இயங்கிய காலத்தில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட நிதி சேகரிப்புக் கட்டமைப்புத் தான் இப்போதும் இருக்கிறது.
அதற்குப் பெரியளவிலான அரசியல் பின்னணியோ தலைமை தாங்கும் ஆற்றலோ இல்லை. அதன் அடிப்படை நோக்கம் நிதி சேகரிப்பு மட்டுமே.
கே.பியின் கைதுக்குப் பின்னர் புலிகள் இயக்கத்தை அரசியல் ரீதியாக வழிநடத்தும் ஆற்றலுடையவர்கள் யாரும் இல்லாததால்இ இப்போது எச்சக் குழுக்களாக சில இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இப்போதைய நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் என்ற பெயரில் யாரும் அறிக்கை வெளியிடலாம்; யாரும் கருத்து வெளியிடலாம்.
இறுக்கமான கட்டுக்கோப்பான இயக்கமாக கடந்த வரும் மே மாதம் வரை கருதப்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போது அதற்கு நேர்மாறான நிலையை அடைந்துள்ளது.
இந்த நிலைமைக்குக் காரணங்கள் பல.
இலங்கை அரசின் நடவடிக்கை, அதற்கு ஆதரவாக இந்தியா மேற்கொள்ளும் நகர்வுகள், சர்வதேச அழுத்தங்கள், புலிகள் இயக்கத்துக்குள்ளே இருந்து வரும் உட்பூசல்கள் போன்ற காரணங்கள் இதில் முக்கியமானவை.
இப்போதைய நிலையில், இலங்கை அரசின் மொழியில் சொல்வதானால் புலிகள் இயக்கம் ஒரு செத்த பாம்பு.
ஆனாலும் இலங்கை அரசு அந்த செத்த பாம்மை அடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அதுபோலத் தான் இந்தியாவும்.
இரு நாடுகளுக்குமே புலிகள் இயக்கம் பெருந்தொல்லையாக இருந்து வந்தது.
அதனால் தான் புலிகளை அழிக்கும் நடவடிக்கையில் இந்த இரு நாடுகளும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் கைகோர்த்து நின்றன.
இப்போது புலிகள் இயக்கம் அழிந்து விட்டது. ஆனாலும் புலிகள் பற்றிப் 'பூச்சாண்டி' காட்டுவதை மட்டும் இரு நாடுகளும் விட்டு விடவில்லை.
இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை நீடித்து வருகிறது.
புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதே இனி எதற்கு அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் என்று அரசிடம் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
புலிகள் இயக்கம் இப்போதும் இல்லை, இனிமேலும் பலம் பெற முடியாது என்றே அரசாங்கமும் அடித்துச் சொல்கிறது.
ஆனாலும் புலிகள் பற்றிய ஏதோ ஒரு கதையை அரசாங்கம் மாதாமாதம் அவிழ்த்து விடுகிறது. இதன் மூலமே அவசரகாலச் சட்டத்தை நீடித்து வருகிறது.
அரசாங்கத்துக்கு அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பன அவசியமானவை.
அவை தேவைப்படுவது புலிகளை அடக்குவதற்காக அல்ல. தமக்கு எதிரானவர்களை அடக்குவதற்கே அவை தேவைப்படுகின்றன.
இதற்காக, புலிகள் சர்வதேச அளவில் இயங்குகிறார்கள், இன்னமும் உயர்ப்புடன் செயற்படுகிறார்கள், நாடு கடந்த அரசை அமைத்துள்ளார்கள் என்றெல்லாம் அரசாங்கம் காரணங்களை அடுக்கிக் கொள்கிறது.
வெளிநாடுகளில் இயங்கும் புலிகளை அடக்க உள்நாட்டில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் விநோதம் என்னவென்று புரியவில்லை.
இலங்கையில் தான் இந்த நிலை என்றால், இந்தியாவும் அதற்குச் சளைத்ததல்ல என்று நிரூபித்துள்ளது.
ராஜிவ்காந்தியின் படுகொலைக்குப் பிறகு 1992 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்துக்கு இந்தியா தடை விதித்தது.
இந்தத் தடை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் இந்தத் தடையை நீடித்தபோது ஒரு சிக்கல் வந்தது.
புலிகள் இயக்கத்தை முற்றாகவே அழித்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் இந்தியாவில் அதற்குத் தொடர்ந்து தடை விதிக்க வேண்டுமா என்று கேள்வி எழுந்தது.
இந்திய உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட இந்தக் கேள்வியைத் தொடர்ந்து, நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான விசேட தீர்ப்பாயம் ஒன்றை மத்திய அரசு நியமித்தது.
புலிகள் இயக்கம் மீதான தடையைத் தொடர வேண்டுமா என்பது குறித்து அந்த விசேட தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையின் முடிவில் புலிகள் இயக்கம் இந்தியாவில் மீள ஒருங்கிணைய வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு அது பாதிப்பை எற்படுத்தக் கூடிய அபாயமிருப்பதாகவும் கூறி, தடையை நீடித்தது சரியே என்று அறிவித்துள்ளது.
புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு இரண்டு வருடங்களாகப் போகின்ற நிலையிலும் இந்தியாவும் சரி, இலங்கையும் சரி அதன் மீதான தடையை விலக்கிக் கொள்ளத் தயாரில்லை.
இந்தியாவில் மத்திய அரசும் சரி, தமிழ்நாடு மாநில அரசும் சரி, புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு விரும்பவில்லை.
காரணம், இந்தத் தடையை வைத்துத் தான் சில அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் அவை அடக்கி வைத்திருக்கின்றன.

வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற புலிகளின் ஆதரவாளர்கள் தெரிந்தோ தெரியாமலோ இந்தத் தடை நீடிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ளனர்.
அவர்கள் மட்டுமல்ல, தாமே உண்மையான புலிகள் என்று கூறிக் கொண்டு செயற்படும் எச்சக் குழுக்களும் கூட இதற்குக் காரணம்.
புலிகள் தொடர்பான உசுப்பல் செய்திகளை வெளியிட்டு வரும் இணையங்களும் இன்னொரு காரணம்.
புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருக்கிறது, பிரபாகரன் இன்னமும் இருக்கிறார், காட்டில் புதிய போராளிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறார், விரைவில் ஐந்தாவது கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்பன போன்ற செய்திகளை வெளியிட்டு புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் ஒரு வித போதை மாயை உருவாக்க முனையும் தரப்பினர் இந்தத் தடைநீடிப்புக்குப் பிரதான காரணமாக இருந்துள்ளனர்.
அவர்களின் பிரசாரங்களையெல்லாம் இந்திய அரசு தூக்கிப் போட்டு வாதிட்டது.
ஏதோ தாங்கள் மட்டும்தான் புலிகளுக்கு ஆதரவாக பேசுகிறோம் என்று கூறிக் கொண்டு கிளம்பியுள்ள வைகோ, நெடுமாறன் போன்றவர்களும் இந்தத் தடை நீடிப்புக்குக் காரணமாகியுள்ளனர்.
புலிகள் இயக்கம் இருக்கிறதா அழிந்து விட்டதா என்று விசேட தீர்ப்பாயத்தில் கேள்வி எழுப்பிய போது, அதை அவ்வளவு சுலபமாக யாராலும் அழித்து விட முடியாது என்று இவர்கள் அதிமேதாவித்தனமான பதில் கூறியிருந்தார்கள்.
புலிகள் இயக்கம் அழிந்து விட்டது என்பதால் தான் தடையை நீக்கலாமா என்று ஆராயவே அந்தத் தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.
'புலிகள் இயக்கம் இருக்கிறது; பிரபாகரன் இருக்கிறார்; அவர் தமிழீழத்தைப் பெற்றுத் தருவார்' என்று இவர்கள் செய்து வரும் பிரசாரத்தின் விளைவு தான் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் மீண்டும் தடையை ஏற்படுத்தியுள்ளது.
ஏதோ நல்லது செய்கிறோம் என்று கூறிக் கொண்டு இவர்கள் எல்லோரும் சேர்ந்து புலிகள் இயக்கத்துக்குத் தடை வாங்கிக் கொடுத்தது தான் மிச்சம்.
அதேவேளை, புலிகள் இயக்கம் அழிந்து விட்டது என்று அவர்கள் வாதிட்டிருந்தால் கூட இந்தியாவில் தடை நீக்கப்பட்டிருக்கும் என்று கருத முடியாது.
ஏனென்றால் இந்திய மத்திய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் அதற்குப் பச்சைக்கொடி காண்பிக்கும் நிலையில் இருக்கவில்லை.
அவர்கள் ஏதேதோ ஆவணங்களைக் காட்டி இந்தியாவில் புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக நிரூபிக்க முனைந்திருப்பர்.
அதேவேளை, இந்தியாவில் புலிகள் இயக்கம் ஒருங்கிணைய முனைகிறார்கள் என்று ஒரு செய்தி வெளியாகிய போது, அதைப் புலிகள் இயக்கம் நிராகரிப்பதாக ஒரு அறிக்கை வெளியானது.
இவையெல்லாம் புலிகள் இயக்கம் அழியவில்லை என்று காண்பிப்பதற்கு போதிய ஆதாரங்களாக இருந்தன.
மத்திய அரசினதும் மாநில அரசினதும் வேலையை சுலபமாக்கி விட்டது புலிகளின் பெயரில் இயங்கும் எச்சக் குழுக்களும் அவர்களின் ஆதரவாளர்களும் தான்.
புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு விட்டால், புலிகள் ஆதரவு அமைப்புகளின் கை ஓங்கி விடும் என்ற பயம் இந்திய அரசுக்கு இருக்கிறது.
தமிழ்த் தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தி விரைவில் வரப் போகும் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தமக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சமும் அதற்கு உள்ளது.
இவை நடக்கக் கூடிய காரியமா என்பது வேறு விடயம்.
ஆனால், இந்த விடயத்தில் எல்லாம் 'றிஸ்க்' எடுக்கின்ற நிலையில் இந்திய அரசு இல்லை.
அதைவிட புலிகள் இயக்கத்தையும் அதன் தலைமையையும் அழித்து விட்ட போதும், அதன் மீதுள்ள வன்மம் இந்திய அரசுக்கு இன்னமும் நீங்கவில்லை. இதன் விளைவே புலிகள் மீதான தடை நீடிப்பு.
புலிகள் இயக்கம் இப்போது பெயருக்குத் தான் இருக்கிறதே தவிர அது எந்த வடிவில் யாரின் கையில் இருக்கிறது என்பது கூடத் தெரியாது.
உண்மையில் இப்போது புலிகள் என்ற பெயரில் இயங்கும் எச்சக் குழுக்களுக்குக் கூட புலிகள் அமைப்பு உள்ளதா என்ற கேள்விக்குப் பதில் தர முடியாது.
ஆனால், இந்திய அரசும் இலங்கை அரசும் தான் புலிகள் இயக்கம் மீள் உயிர் பெற்று வந்து விடும் என்று பூச்சாண்டி காட்டிப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன.
ஒரு காலத்தில் புலிகள் இயக்கம் உலகிலேயே வல்லமைமிக்க அமைப்புகளில் ஒன்றாக விளங்கியது. பலருக்கும் அது அச்சுறுத்தலாகவும் இருந்தது.
ஆனால், இன்று அதை வைத்துப் 'பூச்சாண்டி' காட்டும் நிலை வந்துள்ளது.
இந்தப் 'பூச்சாண்டி'யை வைத்து இந்திய, இலங்கை அரசுகள் எவ்வளவு காலத்துக்குத் வண்டியை ஓட்டப் போகின்றனவோ தெரியவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’