மியன்மாரை விட ஜனநாயக குணாதிசயங்கள் நிறைந்த நாடாக இலங்கை திகழ்கின்றபோதிலும், அந்த குணாதிசயங்கள் இன்றைய அரசாங்கத்திலும் இந்நாட்டிலும் இருக்கின்றனவா? என்பதை பரீட்சித்துப் பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மியன்மாரின் இராணுவ ஆட்சியின் 15 வருட வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவியான ஆங் சான் சூகி மீதான இந்த நடவடிக்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடயத்தில் இன்றைய அரசாங்கத்துக்கு ஒரு வழிகாட்டலாக அமைந்துள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள விஷேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
மியன்மாரின் ஆங் சான் சூகி அமைதிக்கான நோபல் பரிசு வென்றவராவார். இவருக்கு விதிக்கப்பட்டிருந்த வீட்டுக் காவல் சிறையிலிருந்து அவர் விடுதலை பெற்றிருப்பதானது ஜனநாயகத்தை மதிக்கின்ற உலக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
கடந்த 21 வருட இராணுவ ஆட்சிக் காலத்தில் சுமார் 15 வருடங்கள் வீட்டுக் காவல் சிறையில் வைக்கப்பட்ட இவர் தமது சுதந்திரத்தைப் பறிக்கப்பட்டவராகவே இருந்தார்.
நாம் உட்பட உலகில் ஜனநாயகத்தை விரும்புகின்ற சகலரும் வெவேறு விதங்களில் மியன்மார் அரசாங்கத்திடம் வலியுறுத்தி வந்த நிலைமை காணப்பட்டது.
இருப்பினும் இந்த வலியுத்தல்களையும் கேளிக்கைகளையும் மியன்மார் அரசாங்கம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
எது எப்படியிருப்பினும் இறுதியில் ஜனநாயகமே வெற்றி பெற்றுள்ளது. நாட்டின் சுயாதிபத்தியம் என்ற போர்வையில் ஜனநாயகத்தை முடக்குகின்ற ஆட்சியாளர்களை நாம் இனம்கண்டு கொள்ள வேண்டும்.
சுயாதீனம் என்று கூறி மக்களின் சுயாதீனத் தன்மைக்கு எதிராக செயற்படுவதானது ஒரு நிர்வாகத்தின் சுயாதீன ஆட்சியாக இருக்க முடியாது.
விடுதலை பெற்றுள்ள ஆங் சான் சூகி சுதந்திர உலகில் பிரவேசித்து ?? ஜனநாயக ரீதியிலான ??? சகல அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து மியன்மாருக்கு தேவையான ஜனநாயகம் தொடர்பில் அவரது பயணம் அமைய வேண்டுமென்பது எமது பிரார்த்தனையாகும். உலகின் பல்வேறுபட்ட நாடுகளில் பல அரச தலைவர்கள் தமது சந்தர்ப்பவாத அரசியலுக்காக ஜனநாயகத்தை மிதித்து ஆட்சி நடத்துவதற்கு முயற்சிக்கின்றனர். எனினும் அவ்வாறான முயற்சிகள் சதாகாலத்தும் இல்லை என்பதை இந்த சம்பவத்தினூடாக மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம். மியன்மாரிலும் பார்க்க இலங்கை ஜனநாயகம் நிறைந்த நாடாகும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற நாடாகவும் எமது நாடு இருக்கின்றது. எனினும் அது இன்றைய நிலை பரீட்சித்துப் பார்க்க வேண்டிய சூழலுக்குள் தள்ளி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும் மேற்படி ஆங் சான் சூகியின் விடுதலை ஒரு வழிகாட்டலாக அமைந்துள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’