யாழ் நல்லூர் கந்தசாமி கோயில் பகுதிக்கு இன்று திடீர் விஜயம் மேற்கொண்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆலயச் சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பதுடன் சிறு வியாபார நடவடிக்கைக்கென பிரத்தியேகமாக இடம் ஒதுக்கி கொடுக்கும் படியும் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நல்லூர் கந்தசாமி கோயில் வளாகத்தைச் சூழ தற்போது சுற்றுவேலி அமைக்கப்பட்டுவரும் நிலையில் சுற்றுவேலிக்குள் கச்சான் மற்றும் பழங்கள் உள்ளிட்ட எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளுக்கும் அதேநேரம் அப்பகுதிக்குள் துவிச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கும் யாழ் மாநகர சபை அனுமதி வழங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை கோயில் வளாகத்தில் உள்ள வெள்ளை மண் மழை வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்படாதவாறு கோயிலைச் சூழவும் சிறு அளவிலான சுற்றுச் சுவர் அமைக்கப்பட வேண்டுமென்றும் அப்பகுதி பக்தர்கள் இளைப்பாற மட்டுமே பாவிக்க வேண்டுமென்றும் தெரிவித்த அமைச்சர் அவர்கள் கோயிலின் தென்புற பிரதான வீதியின் வெளிப்புறத்தே சிறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளுக்கென தற்காலிகமான வியாபார நிலையங்களை அமைத்துக் கொடுக்குமாறும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கக் கூடிய வழி வகைகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் மாநகர சபை முதல்வருக்குப் பணிப்புரை வழங்கினார்.
இதனிடையே துவிச்சக்கர வண்டிகள் உட்பட வாகனங்களுக்கு தரிப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன் பக்தர்களுக்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படாத வகையில் ஆலயச் சூழல் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்றும் கழிவு நீர் கோயில் வளாகத்தில் தேங்கி நிற்காதவாறு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோயில் கிணற்றுக்கு அருகே ஒரு குப்பை சேகரிப்பு பெட்டியை வைத்து அதன் மூலம் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் குறிப்பாக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படாத வகையில் சகல நடவடிக்கைகளும் அமைய வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்திக் கூறியமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’