வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 30 அக்டோபர், 2010

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மனோ கணேசனுடன் சந்திப்பு

னைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை முன்னணியின் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் சந்தித்து கலந்துரையாடினர்.

12 பேர் அடங்கிய மாணவர் தூதுக்குழுவினருடனான சந்திப்பில் மனோ கணேசனுடன் முன்னணியின் தேசிய அமைப்பாளர் ராஜேந்திரனும், மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதனும் கலந்துகொண்டனர்.
"ஒட்டுமொத்தமான அடக்குமுறைக்கு எதிராக அனைத்து இனத்தவரும் இணைந்துகொள்ளும் ஒட்டுமொத்தமான போராட்டத்தில் எமது கட்சி இணைந்துகொண்டுள்ளது. அதேபோல் உங்களது போராட்டங்களில் தமிழ் மாணவர்களதும், தமிழ் மக்களினதும் உணர்வுகளையும் இணைத்து கொள்ளுங்கள். இதற்கு பாலமாக செயற்படுவதற்கு நாம் தயார்" என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளிடம் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முன்னணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மீது அரசாங்கத்தினால் நடத்தப்படும் அடக்குமுறை, ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ண நேற்று கைது செய்யப்பட்டமை, தற்சமயம் 30 மாணவர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளமை, சுமார் 200 பேர்வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை மற்றும் ஒன்றியத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு நேரடி விளக்கமளித்து ஆதரவு கோரும் கலந்துரையாடல் வரிசையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் பேசுகையில்,
"மாணவர்கள் மீதான அடக்குமுறைகளையும், உதுல் பிரேமரட்ண கைதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இது தொடர்பில் மாணவர் அமைப்புகளுடனும், ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு எமது கட்சி தயாராக இருக்கின்றது. இந்த அரச அடக்குமுறை தமிழ் மாணவர்களையும், தமிழ் மக்களையும் பொருத்தவரையில் புதியவை அல்ல.
இன்றைய அரசாங்கத்தின் ஆட்சியில் கடந்த 5 வருடங்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த தமிழ் மாணவர்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். உங்களது புள்ளி விபரங்களில் இடம்பெற்றுள்ள எண்ணிக்கைகளைவிட பெருந்தொகையான தமிழ் மாணவர்கள் சிறைக்கூடங்களில் நீண்ட காலமாக வாடுகிறார்கள். இன்னும் பெருந்தொகையான தமிழ் மாணவர்கள் தமது பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாதுள்ளார்கள். இதைவிட பெருந்தொகையான தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். யுத்தத்தினால் சகல விதமான கல்வி வளங்களையும் இழந்துள்ளார்கள்.
எமது மாணவர்கள் துன்புறும்பொழுது தென்னிலங்கையில் இருந்து உங்களது அமைப்புகள் உட்பட அரசியல் கட்சிகள் மத்தியில் இருந்து எமது மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவு குரல் எழும்பவில்லை. எமது மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எனது தலைமையில் இங்கே தென்னிலங்கையில் நடத்தப்பட்ட போராட்டங்கள் கொச்சைப்படுத்தப்பட்டன. இன்று உங்களுக்கு ஆதரவு வழங்கும் சில கட்சிகள் அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு என்னையும், எமது கட்சியையும் புலிகள் என்றும், பிரிவினைவாதிகள் என்றும் வசைப்பாடினார்கள்.
ஆனால் இவற்றை மனதில் வைத்துக்கொண்டு நாங்கள் இன்று உங்களை உதாசீனப்படுத்தவில்லை என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். கடந்த காலங்களில் சிங்கள தரப்பிலும், தமிழ் தரப்பிலும் தவறுகள் நிகழ்ந்துள்ளன. இவை நிவர்த்தி செய்யப்படவேண்டும். எமது கட்சியை பொருத்தவரையில் அன்றும், இன்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக செயற்படுகின்றோம். தமிழர்களுக்கு, சிங்களவர்களுக்கு, முஸ்லிம்களுக்கு என தனித்தனி வழிகள் இன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை.
ஒட்டுமொத்தமான அடக்குமுறைக்கு எதிராக அனைத்து இனத்தவரும் இணைந்துகொள்ளும் ஒட்டுமொத்தமான போராட்டத்தில் எமது கட்சி இணைந்துகொண்டுள்ளது. அதேபோல் உங்களது போராட்டங்களில் தமிழ் மாணவர்களதும், தமிழ் மக்களினதும் உணர்வுகளையும் இணைத்துகொள்ளுங்கள். இதற்கு பாலமாக செயற்படுவதற்கு நாம் தயார்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’