வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 15 அக்டோபர், 2010

'ஆஸ்திரேலியர் அட்டூழியம் செய்யவில்லை'

தில்லியில் நடந்துமுடிந்துள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டிருந்த ஆஸ்திரேலிய தடகள வீரர்கள் சிலர், விளையாட்டு வீரர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வேண்டுமென்றே பொருட்சேதம் விளைவித்தனர் என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலியா மறுத்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த புதன்கிழமை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தோற்றது அறிந்து ஆத்திரம் அடைந்த ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் அட்டூழியம் செய்ததாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
குடியிருப்பு வளாகத்தில் இருந்த மேஜை நாற்காலி போன்றவவற்றையும், மின்சாரக் கருவிகளையும் அடித்து உடைத்ததோடு, துணி துவைக்கும் இயந்திரம் ஒன்றை எட்டாவது மாடியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் கீழே தள்ளி விட்டிருந்தனர் என்று ஊடகத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

தூதரகம் மின்-அஞ்சல்

ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் காமன்வெல்த் போட்டிகளில் தாங்கள் அடைந்த வெற்றியை உணர்ச்சிபொங்க கொண்டாடிய சமயத்தில் துணி துவைக்கும் இயந்திரம் ஒன்று சேதமானது என்பதை இந்தியாவிலுள்ள ஆஸ்திரேலியத் தூதரகம் ஒப்புக்கொண்டுள்ளது.ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் பொருட்களை அடித்து நொறுக்கினார்கள் என்பதை ஆஸ்திரேலியா மறுத்துள்ளது.
"குடியிருப்பு வளாகத் துப்புரவு ஊழியர்கள் ஆஸ்திரேலிய வீரர்களைத் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை" என வீரர்கள் குடியிருப்பு வளாகத்தில் கடமையில் இருந்த பெயர் குறிப்பிடப்படாத பொலிஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஓஃப் இந்தியா நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய வெற்றிக்கு பெரும் பங்காற்றிய சச்சின் டெண்டுல்கரின் பெயரைச் சொல்லி திட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் கோஷமிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இந்தியாவிலுள்ள ஆஸ்திரேலியத் தூதரகம் பிபிசிக்கு மின் அஞ்சலில் தெரிவித்த பதிலில்,"தமது நாட்டு அணி கிரிக்கெட்டில் தோற்றதால் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆத்திரம் அடையவில்லை. அட்டூழியத்தில் ஈடுபடவும் இல்லை" என்று தெரிவித்துள்ளது.
விளையாட்டு நிர்வாகக் குழிவினரிடம் இருந்து பொருட்சேதம் செய்யப்பட்டதான புகார் எதுவும் இதுவரை தங்களுக்கு வரவில்லை என்றும் போலிசார் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’