பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற போது அதற்கு மாறாகவும் அபிவிருத்திக்கு இடையூறாகவும் சட்டத்திற்கு புறம்பாகவும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது தயவுதாட்சணியமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார்
.இன்றைய தினம் (25) சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் மக்களுக்கு பணியாற்றுவதற்காகத்தான் அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குகிறது. எனவே அரச ஊழியர்கள் மக்களின் இடங்களுக்குச் சென்று அவர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டு அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி மக்களுக்காகவே பணியாற்றும் போது நான் உங்களுக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பேன் எனவும் கூறினார்.
தொடர்ந்து கடந்த மாத ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பான கூட்டறிக்கை ஒவ்வொரு துறைசார்ந்த விடயங்களாக வாசிக்கப்பட அதன் முன்னேற்றங்கள் குறித்து மக்கள் அமைப்புகளின் கருத்துக்களும் விமர்சனங்களும் பெறப்பட்டு அந்த இடத்திலேயே உரிய அந்தந்த திணைக்களங்களின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வுகளும் பெறப்பட்டன. 
அந்த வகையில் குடிநீர் மின்சாரம் போக்குவரத்து நீர்விநியோகம் மீன்பிடி விவசாயம் கால்நடை வீதி அபிவிருத்தி கல்வி கலாசாரம் வீடமைப்பு கிராம அபிவிருத்தி கைத்தொழில் கூட்டுறவு பனை தென்னை என பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன் மக்களின் தேவைகள் கேட்டறிந்து அதற்கு உரிய திணைக்களங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் கோரப்பட்டு அத்தேவைகளை பூர்த்தி செய்து மக்களுக்கு வழங்குமாறு சந்திரகுமார் அவர்கள் பணிப்புரை வழங்கினார்.
அத்தோடு நிறுவனங்களாலும் திணைக்களங்களாலும் பொறுப்பேற்கப்பட்ட வேலைகள் அனைத்தும் விரைவாக முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இவ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி அன்ரன் யோகநாயகம், ஈ.பி.டி.பி. வலிகாம இணைப்பாளர் ஜீவன் ஈ.பி.டி.பி மானிப்பாய் பிரதேச பொறுப்பாளர் ஜீவா உட்பட அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் கிராம அலுவலர்கள் மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 
                      -
                    

  

















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’