வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 25 செப்டம்பர், 2010

ஆரியவதிக்கு மனநோய் இல்லை

வுதி அரேபியாவிலிருந்து உடலில் ஆணிகள் ஏற்றப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் நாடு திரும்பிய ஆரியவதி என்ற இலங்கைப் பணிப்பெண் எவ்விதமான மனநோயினாலும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர் சவுதியிலிருந்து நாடு திரும்பிய ஆரியவதி என்ற 49 வயது பெண்மணியின் உடலில் சுமார் இரண்டு அங்குலம் வரை நீளமான 24 ஆணிகளும் ஊசிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டது.
பின்னர் நீண்டநேர சத்திரசிகிச்சைக்குப்பின்னர் அவரது உடலில் இருந்து 13 அணிகளையும் ஐந்து ஊசிகளையும் மருத்துவர்கள் அகற்றினர்.
எஞ்சிய ஆணிகளை அகற்றினால் அவரது நரம்புகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ள மருத்துவர்கள் அவற்றை அவரது உடலிலேயே விட்டுவிட்டனர்.
தான் பணிபுரிந்த வீட்டு எஜமானும் எஜமானியும் சேர்ந்து தனக்கு தண்டனையாக ஆணிகளை சூடேற்றி உடம்பில் ஏற்றியதாக ஆரியவதி தெரிவித்தார்.
இதற்கிடையில், ஆரியவதிக்கு நேர்ந்த இந்த கொடூரத்தைக் கண்டித்தும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் வீட்டுப் பணியாட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்க மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை உறுதியாக மறுத்த சவுதி அரசாங்கம் ஆரியவதி பொய் கூறுவதாகவும், அவரது உடலில் ஆணிகள் இருந்திருந்தால் விமான நிலையத்தில் உலோகங்களை கண்டறியும் கருவி அதனை உறுதிப்படுத்தியிருக்கும் என்று வாதங்களை முன்வைத்திருந்தது.
ஆனால், இது தொடர்பில் பிபிசியிடம் கருத்து வெளியிட்டிருந்த ஆரியவதி, இரவு நேரத்தில் தான் விமானநிலையத்துக்கு அழைத்து வரப்பட்டதாகவும் பாதுகாப்பு சோதனைக் கருவியை கடந்த போது, அது ஒலி எழுப்பியதாகவும், ஆனால் தன்னை எவரும் கேள்வி கேட்கவில்லை எனவும் கூறினார்.
இந்நிலையில், அவரது மனநிலையில் பாதிப்பு இருக்கலாம் எனவும் அதனால் அவர் தனக்கு தானே ஆணிகளை ஏற்றிக்கொண்டிருக்கலாம் எனவும் வாதிடப்பட்டன.
ஆனால் தற்போது மனநிலை பரிசோதனைகளை நடத்தியுள்ள மருத்துவர்கள், ஆரியவதிக்கு எவ்விதமான மனநோயும் இல்லையென அறிக்கை வழங்கியுள்ளனர்.
ஆரியவதி விவகாரம் எந்த மட்டத்தில் உள்ளது என்று சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, இப்போது தான் ரம்ஜான் பண்டிகை விடுமுறை முடிந்துள்ளது. இனிமேல் தான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி தெரியவரும் என பிபிசிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’