வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

மழையில் அகதிகள் அவதி.

இலங்கையின் வடக்கே வவுனியா பிரதேசத்தில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதையடுத்து, சொந்த இடங்களில் மீள்குடியேறி, கூடாரங்களில் வசிக்கும் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வீமன்கல் கிராமப்பகுதியில் 33 வருடங்களின் பின்னர் மீள்குடியேறியுள்ள குடும்பங்களின் கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் இருக்கவோ படுக்கவோ முடியாத நிலை ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
வீமன்கல் மட்டுமல்லாமல், குடாகச்சகொடி, பாவற்குளம், ரன்கெட்கம உள்ளிட்ட வேறு பல மீள்குடியேற்றக் கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பாதிப்புகள் குறித்து வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தற்போது ஆரம்பித்துள்ள மழையினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் தமக்கு வந்து கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
எனினும். மழையினால் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு வழங்குவதற்கென அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கு மேலதிகமாகக் கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டு கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குத் தேவையான கூரைத்தகடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
அத்துடன் தொடர்ச்சியான அல்லது கடும் மழையினால் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஐநாவின் அகதிகளுக்கான தூதரக அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு அதற்கென ஒரு திட்டத்தை வகுக்குமாறு அவர்களிடம் கோரப்பட்டிருப்பதாகவும், அந்தத் திட்டத்திற்கமைய பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்படும் குடும்பங்கள் பராமரிக்கப்படுவார்கள் என்றும் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’