இன்றைய தினம் எமது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய தினங்களில் ஒன்றாக அமைகின்றது. வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் கல்வி நடவடிக்கைகளுக்காக மகாவித்தியாலய கல்விச் சமூகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்வை இராணுவ நிலைகள் இருக்கும் மக்கள் குடியிருப்பு மற்றும் பயிர் நிலப் பகுதிகளுக்குள் எமது மக்கள் தமக்குச் சொந்தமான இடங்களுக்குத் திரும்பும் ஓர் ஆரம்ப கட்டமாகவும் கொள்ள முடியும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று காலை வசாவிளான் மத்திய மகாவித்தியாலய கட்டடங்களை கல்விச் சமூகத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கிடைக்கும் சந்தர்ப்பங்களை நாம் சரிவரப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு கிடைக்க வேண்டியவைக்காக நாம் முயற்சிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
தென்னிலங்கையில் சுதந்திரம் தங்கமென்றால் வடக்கில் அது தகரமாக இருக்க முடியாது என்ற எமது கருத்தை ஜனாதிபதி அவர்கள் கூட ஏற்றுக் கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போது அவரே அதனை வெளிப்படையாகக் கூறியதையும் அமைச்சர் அவர்கள் நினைவுபடுத்தினார்.
இங்கு உரையாற்றிய வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்கள் ஜனாதிபதி அவர்களது ஆலோசனையின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமைத்துவத்தின் கீழும் வழிகாட்டுதலின் பேரிலும் அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களின் பங்களிப்புடன் யாழ் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பொதுமக்களது பாவனைக்கென விடப்படாத இடங்களும் படிப்படியாக விடப்பட்டு வருகின்றன என்று விளக்கினார்.
யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கருத்துத் தெரிவிக்கையில் மிதிவெடிகள் அகற்றப்படாமை காரணமாகவே இப்பாடசாலையை கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது என்றும் இப்பாடசாலையை கல்விச் சமூகத்திடம் வழங்குவதில் தான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைவதாகவும் இராணுவத்தினரை ஈடுபடுத்தி பாடசாலையின் கட்டிடம் ஒன்றை தான் முழுமையாகப் புனரமைத்துத் தருவதாகவும் தெரிவித்தார்.
மேற்படி பாடசாலை மாணவர்களது வசதி கருதி பேரூந்து சேவை ஒன்றை ஏற்பாடு செய்வதென்றும் பாடசாலைக்குத் தேவையான வசதிகளை படிப்படியாக வழங்குவதென்றும் இங்கு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலைக்குரிய தளபாடங்கள் கணனி இயந்திரங்கள் புத்தகங்கள் என்பன அதிதிகளால் கையளிக்கப்பட்டன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’