வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும்-மாவை சேனாதிராஜா எம்.பி

ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் வன்னி மக்கள் அளித்த சாட்சியத்தை இராணுவப் பேச்சாளர் மறுத்துள்ள நிலையில் அந்த மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாட்சியமளித்த மக்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா நேற்று சபையில் கோரிக்கை விடுத்தார்.
யுத்தம் என்ற பெயரில் வடக்கு கிழக்கில் எமது சமூகத்தை அழித்தொழித்தது போதும்; சொத்துக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தியதும் போதும். தற்போது அங்கு இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வை தடுத்துநிறுத்துமாறும் எமது பிரதேசங்களையாவது பாதுகாக்குமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

யுத்தம் நிறைவடைந்து விட்டதாகவும் புலிகளை அழித்துவிட்டதாகவும், கூறுகின்ற அரசாங்கம் எதற்காக இந்த அவசரகாலச் சட்டத்தை நீடித்துக்கொண்டிருக்கின்றது என்பது தெரியவில்லை. அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருவதால் இராணுவப் படைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்படுகின்றன. இவ்வாறு இராணுவ அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதன் மூலம் அது சிவில் நிர்வாகத்துக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிடுகின்றது. வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் சிவில் நிர்வாகத்துக்குள் இராணுவ ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் அரச நிர்வாகிகளால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை இராணுவத்தினர் கையேற்றிருப்பது இயல்புநிலைக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆயிரக் கணக்கான இராணுவத்தினை குவிப்பதற்கோ அல்லது இராணுவ முகாம்களை அமைப்பதற்கோ தேவைகள் இல்லை. யுத்தம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் சென்றுவிட்ட போதிலும் தமிழ் மக்களின் நிலங்கள், வீடுகள் இராணுவத்தினரிடமிருந்து விடுபடவில்லை. இன்றும் கூட எமது மக்களின் வீடுகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்து முகாமிட்டுள்ளனர். யுத்தத்தினூடாக எமது மக்கள் அழிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில், சூழல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சுட்டிக்காட்டி காங்கேசன்துறையில் சுண்ணக்கல் அகழ்வினைத் தடுத்து நிறுத்தியிருந்தோம்.
ஆனால், தற்போது அங்கிருந்து சுண்ணக்கல் அகழப்பட்டு கப்பல் கப்பலாக ஏற்றப்படுவதாக தெரியவருகின்றது. இந்நிலையில் இந்த கற்கள் எங்கு கொண்செல்லப்படுகின்றன என்று அரச அதிகாரிகளே கேள்வியெழுப்புகின்றனர். அப்படியானால் இதனை யார் செய்கின்றர்? எம்மைத்தான் அழித்துவிட்டீர்கள். எமது பிரதேசங்களையாவது பாதுகாப்பதற்கு உரிய அதிகாரிகள், அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மீள்குடியேற்றம் என்ற பெயரில் அரசு பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றது. ஆனாலும், தற்போது பருவமழைக் காலமாகும். செப்டெம்பர் வந்து விட்டாலே வடக்கில் வெள்ளம் என்பது அறிந்த விடயமாகும். அப்படியானால் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்கள் அழிவடைந்த பிரதேசங்களிலும் மரங்களுக்கு கீழும் எவ்வாறு இருக்கப்போகின்றனர் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இந்த பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தையும் இன்னும் அவசரமான சட்டங்களையும் கொண்டுவருகின்ற அரசாங்கம், வன்னி மக்கள் மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படும் வகையில் ஒரு சட்டத்தை கொண்டுவந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது இவ்வாறிருக்க செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் கணிசமானதொகை முன்னாள் புலிப்போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் பெற்றோர் அவர்களை அழைத்துச் செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் கடந்த 18ஆம் திகதி அவர்களது பெற்றோர் குறித்த முகாமுக்குச் சென்று கையெழுத்திட்டுள்ள போதிலும் இதுவரையில் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்ற தகவலும் இல்லை. எனவே, அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
இது இவ்வாறிருக்க அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு விசாரணைகளை நடத்திவருகின்றது. இதில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் சாட்சியமளித்துள்ளனர். தமது பிள்ளைகள், கணவர்மார், சகோதரங்கள் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாதிருப்பதாகவும் இன்னும் தாம் சந்தித்தவற்றையும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமாக வழங்கியுள்ளனர்.
இராணுவப் பேச்சாளர் இவ்வாறு தமிழ் மக்களின் சாட்சியத்தை மறுத்திருப்பதானது எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளித்த எமது மக்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’