வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

வசாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தை சொந்த இடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை.

வலிகாமம் வடக்கு வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் நவோதயா பாடசாலையினை மீண்டும் அதன் சொந்த இடத்தில் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச பொதுமக்களும் பாடசாலை நலன்விரும்பிகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (19) காலை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் பணிமனைக்கு வருகை தந்த பாடசாலை அபிவிருத்திச் சபைத் தலைவர் கனகராஜா தலைமையிலான நலன்விரும்பிகளும் பிரதேச மக்களுமே மேற்படி வேண்டுகோளை விடுத்தனர். அவ்வேண்டுகோள் தொடர்பாக மேலும் தகவல் தெரிவித்த அவர்கள் தற்சமயம் சுமார் 1300 மாணவர்கள் கல்விகற்றுவரும் நிலையில் தனியார் வீடுகளிலேயே பாடசாலை இயங்கி வருகின்றது. தற்போது இயல்புநிலைமை மீளத்திரும்பிவரும் நிலையில் வீட்டு உரிமையாளர்கள் தமது வீடுகளை மீண்டும் கோரிநிற்கின்றனர். இந்நிலையில் அமைச்சரவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாடசாலையினை மீண்டும் அதன் சொந்த இடத்தில் இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

இவர்களின் வேண்டுகோளின்பேரில் கூடிய கரிசனை செலுத்திய அமைச்சரவர்கள் இவ் விடயங்களை கோரிக்கை மூலமாகத்தான் நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை. நான் பெருமளவு நாட்களை இங்கு மக்களுடன்தான் கழிக்கின்றேன். இருபது வருட யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை ஒரேநாளில் தீர்த்துவைக்கமுடியாது எனத்தெரிவித்ததுடன் அண்மைக்காலத்தில் கட்டம் கட்டமாக பெருமளவு உயர்பாதுகாப்பு வலயங்கள் விடுவிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். மேலும் எதிர்காலத்தில் உயர் பாதுகாப்பு வலயங்கள் இருக்கமுடியாது என்ற யாழ். கட்டளைத் தளபதியின் கூற்றினையும் எடுத்துக்காட்டியதுடன் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை விரைவில் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார். இச்சமயம் எதிர்ப்பு அரசியல் ஊடாக எதையும் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதையும் இணக்க அரசியலே நடைமுறைச்சாத்தியமான விடயம் என்பதையும் தெளிவுபடுத்தியதுடன் இணக்க அரசியல் என்பது அடிமைத்தனம் அல்ல என்பதையும் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பின் இறுதியில் அப்பிரதேசத்திற்கு விரைவில் தான் நேரடியாக விஜயம் செய்து பார்வையிடவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’