விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச இணைப்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி) கைது செய்யப்பட்டமையானது அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்புக்கு விழுந்த பேரடி என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கூறியுள்ளது.
2009ஆம் ஆண்டின் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்று குறித்த இராஜாங்க திணைக்களத்தினால் நேற்று அமெரிக்கா காங்கிரஸிடம் கையளிக்கப்பட்டது.
அந்த அறிக்கையிலேயே மேற்படி விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்களிடமிருந்து குறித்த வலையமைப்பு தொடர்ந்தும் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புலிகள் அமைப்புக்கு ஆதரவளித்த இலங்கையர்களிடமிருந்து குறித்த நிதி சேகரிக்கப்பட்டு வந்ததாகவும் அதற்காக அவர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சில தமிழர் அமைப்புக்களும் இந்த நிதி சேகரிப்புக்காக உதவி வந்துள்ளன. இலங்கை அரசாங்கமானது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பலரை அழித்தொழித்ததுடன் மேலும் ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களையும் வடக்கு கிழக்கு பொதுமக்களையும் சிறந்த முறையில் சுற்றிவளைத்தது.
இந்நிலையில், கடந்த மே மாதம் 18ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த போதிலும் இந்த இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகள் காரணமாக இரு தரப்பிலிருந்தும் பாரியளவிலான சேதங்கள் இடம்பெற்றதாக குறித்த அமெரிக்க இராஜாங்க திணைக்கள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-Dailymirror -
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’