இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க நிலைத்து நிற்கக்கூடியதான தீர்வொன்றுக்கு முழுமையான பங்களிப்பை வழங்க முடியுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, அ.விநாயகமூர்த்தி, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமத்திரன் ஆகியோர் புதுடில்லிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலாளர் திருமதி நிருபமா ராவ் ஆகியோரோடு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்கள்.
இலங்கைத் தமிழ் பேசும் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதும், நிலைத்து நிற்கக்கூடியதுமான தீர்வொன்றை அடைவதற்கு இந்தியா தனது முழுமையான பங்களிப்பைச் செய்யும் என்ற வாக்குறுதியை பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏனைய அமைச்சர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவிற்கு வழங்கியுள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவினர் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காகவும் புனர்வாழ்விற்காகவும் 50 ஆயிரம் வீடுகளை இந்தியா அமைத்துக் கொடுக்க முன்வந்தமைக்கு இந்திய அரசிற்கும் இந்திய மக்களிற்கும் இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இப் பாரிய உதவியோடு வாழ்வாதாரத்திற்காகவும் உட்கட்டமைப்பு, அபிவிருத்தி சம்பந்தமாக வடக்கிலே இந்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் வடக்கிலே வாழும் தமிழ் மக்களுடைய எதிர்கால நல்வாழ்விற்கு பேருதவியாக அமையும் என்பதையும் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ் மக்கள் இடப்பெயர்வுக்கு முன்னர் வாழ்ந்த அதே இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியதன் அவசர, அவசியத் தேவையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தலைவர்களுக்கு வலியுறுத்தியது.
அத்தோடு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களுக்கு திரும்பி தமது சகஜ வாழ்வை மீள ஏற்படுத்த வேண்டும்.
வடக்குகிழக்கில் ஏற்றுக் கொள்ள முடியாத குடிசன விகிதாசார மாற்றங்களைக் கொண்டு வரும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துக் கூறினர்.
இனப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கும் இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் சுயமரியாதையோடும் சுயகௌரவத்தோடும் பாதுகாப்போடும் வாழ்வதற்கும் அவர்கள் தமது நியாயமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அபிலாசைகளை கண்டடைவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து செயற்படுவதற்கான தீர்மானத்தை பிரதமர் வெளிப்படுத்தினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கான இச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியமைக்காக தனது மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’