பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவனைக்கடத்திச் சென்றவர்கள் பின்னர் இடைவழியில் இறக்கிவிட்ட சம்பவமொன்று வெள்ளிக்கிழமை மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.மஸ்கெலியா சென்.ஜோசப் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஜோர்ஜ் நிரோசன் நிசாந்தன் என்ற 12 வயதுச் சிறுவனே கடத்தப்பட்டு கைவிடப்பட்டவராவார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;
வெள்ளை நிற டொல்பின் ரக வாகனத்தில் சிறுவனைப் பிடித்து ஏற்றியவர்கள் அவரின் இரு கைகளையும் பின்புறமாகக் கட்டியுள்ளனர். வாகனம் நோட்டன் நெடுஞ்சாலை வழியாகச் சென்றபோது லக்ஸபான செல்லும் வீதியில் சிறுவனை இறக்கிவிட்டனர்.
இதனைக் கண்ட சிலர் 119 என்ற பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் கொடுத்தனர்.பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனை மீட்டனர்.கடத்தலில் ஈடுபட்ட வாகனம் பின்னர் கினிகத்தேனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் அதிலிருந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் அட்டன் மேலதிக நீதிவான் ஆர்.ராஜேந்திரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் ஒருவர் குளியாப்பிட்டியைச் சேர்ந்தவர் என்றும் மற்றவர் மினுவாங்கொடையைச் சேர்ந்தவர் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.இக்கடத்தல் சம்பவம் மஸ்கெலியா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’