கடந்த சில தினங்களில் போரின் போது கணவர்களை இழந்த பெண்களின் மறுவாழ்வு தொடர்பான கூட்டங்களை அரசு வடபகுதியில் நடத்தியுள்ளது.
இலங்கை அரசின் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்திருத்தத் துறை அமைச்சர் ட்யூ குணசேகரா அவர்கள் இந்தக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.தெள்ளிப்பளையில் இடம் பெற்ற கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான பாலகுமாரன் மற்றும் யோகி ஆகியோரின் மனைவிகளும் அவரை சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பின் போது இவர்கள் தமது கணவர்கள் குறித்து தம்மிடம் ஏதும் பேசவில்லை என்றும், திருமதி பாலகுமார் மட்டும் தமது குழந்தைகள் குறித்து தம்மிடம் கேட்டதாகவும் அமைச்சர் ட்யூ குணசேகர தமிழோசையிடம் கூறியுள்ளார்.
அதே போல யோகியின் மனைவி தான் கஷ்டத்தில் இருப்பதாகவும் தனக்கு உதவும்படி கோரியதாகவும் அமைச்சர் கூறுகிறார்.
பாலகுமார் மற்றும் யோகி ஆகியோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து தனக்கு தெரியாது |
போரின் இறுதியில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களின் பெயர் விபரங்களை இலங்கை அரசு வெளியிட்டது. ஆனால் அதில் பாலகுமார் மற்றும் யோகியின் பெயர்கள் இடம்பெறவில்லை.
இவர்களும் வேறு சில தலைவர்களும் அரச படையினரிடம் சரணடைந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் அமைப்பும் இவர்கள் சரணடைந்ததாக கூறியிருந்தது.
எனினும் பாலகுமார் மற்றும் யோகி ஆகியோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து தனக்கு தெரியாது என்று கூறும் ட்யூ குணசேகர அது தொடர்பான விவாதத்தில் இறங்கத் தான் தயாராக இல்லை எனவும் கூறுகிறார்.
அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை பராமரிப்பது மட்டுமே தமது பொறுப்பு என்றும், அவர்களின் விசாரணை தொடர்பான விடயங்கள் தனது அதிகார வரம்புக்குள் வராது எனவும் அவர் கூறுகிறார்.
இலங்கை அரசு சுமார் 8000 போராளிகள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. ஆனால் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட அது தொடர்ந்து மறுத்து வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’