யாழ். சித்தன்கேணியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்நாள் அதிகாலை 2 மணிக்கு சென்ற இனந்தெரியாத குழு ஒன்று, ஆயுதமுனையில் குடும்பத்தவர்களை அச்சுறுத்தி நகைகள், பணம், கைத்தொலைபேசி என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
நேற்று அதிகாலை 2 மணியளவில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு வாள், கத்தி, பொல்லுகள் சகிதம் நுழைந்தது ஒரு கும்பல்.
ஆசிரியரின் தந்தையான சிவபாதம் (வயது 65) என்பவரைப் பொல்லால் தாக்கிக் காயப்படுத்திவிட்டு ஆசிரியரையும் அவரின் மனைவி பிள்ளைகளையும் ஆயுத முனையில் மிரட்டிய கும்பல் 31 பவுண் நகை, 2500 ரூபா பணம், கையடக்கத் தொலைபேசி, சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றது.
குடும்பத்தினரை ஆயுதமுனையில் பிடித்து வைத்திருந்த கொள்ளையர் அலுமாரிகள், உடைகள் என்பவற்றையும் ஆராய்ந்த பின்பே சென்றனர்.
தொலைபேசி மூலம் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கொக்ககோலா போத்தல், அலவாங்கு, ரெஸ்ரர் (மின் பரிசோதிக்கும் கருவி), பொல்லுகள் போன்ற தடயங்களை எடுத்துச் சென்றனர்.
கொள்ளையரின் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த முதியவர் சங்கானை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’