வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 ஜூலை, 2010

மட்டக்களப்பு மாவட்டத்தில் பேரதிசயம்! துளசி மரத்தடியில் இருந்து தெய்வீக அம்மன் சிலை! (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள களுவாஞ்சிக்குடி கிராமத்தில் இருக்கும் வீடு ஒன்றில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.இந்த வீட்டு வளவில் வளர்ந்திருக்கும் துளசி மரத்தடியிலிருந்து சாட்சாத் முத்து மாரிஅம்மன் உருவச் சிலையொன்று வெளிப்பட்டு வந்துள்ளது.
இந்த அற்புதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முத்து மாரி அம்மன் ஆலயங்களின் வருடாந்த உற்சவங்களின் நிறைவு நாளான திருக்குளிர்த்தி தினத்தில் அதாவது கடந்த சனிக்கிழமை நடந்தேறியது. இச்சிலை ஐம்பொன்னால் ஆனது. இதன் உயரம் ஒன்றரை அடி.

இந்தச் சிலை தொடர்பாக மனதை புல்லரிக்க வைக்கும் சம்பவம் ஒன்றும் உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை சர்வார்ந்த சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குருக்களான சிவஸ்ரீ பஞ்சாட்சர புவனேஸ்வரக் குருக்களின் புதல்வி தேவதினி(வயது 34). தீபரூபன்-தேவதினி தம்பதிகளுக்கு கடந்த 12 வருடங்களாகக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை.இதனால் தேவதினி பிள்ளை வரம் வேண்டி ஏறி இறங்காத அம்மன் கோவில்களும் இல்லை.நாளடைவில் இவர் மாரியம்மனின் தீவிர பக்தையாக மாறி விட்டார்.

இவருக்கு மேல் மாரியம்மன் வெளிப்படுகின்றமையும் உண்டு. சுமார் ஒன்றரை வருடத்துக்கு முன் இலக்கம் 98,குமரன் கலாமன்ற வீதி,களுவாஞ்சிக்குடி வடக்கு, களுவாஞ்சிக்குடி என்கிற முகவரியில் உள்ள வீட்டுக்கு வந்து தம்பதிகள் இருவரும் குடியேறினர். இந்த வீட்டில் கும்பம் வைத்து மாரியம்மனை வழிபடத் தொடங்கினர். கடந்த மார்ச் மாதம் 06 ஆம் திகதி அம்மன் இருவரது கனவிலும் தோன்றி இருக்கின்றார். உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும், நானும் உங்கள் வீட்டில் எழுந்தருளுவேன் என்று திருவாய் மலர்ந்திருக்கின்றார்.

மறுநாள் குறித்த பெண் அம்மனின் கும்பத்தை வழிபடச் சென்றபோது அக்கும்பத்தில் இருந்து ஒளி ஒன்று தோன்றி இருக்கின்றது.இவர் மயங்கி விழுந்து விட்டார். இச்சம்பவத்துக்குப் பின் இந்த வீட்டில் இன்னும் ஏராளமான அதிசயங்கள் இடம்பெறத் தொடங்கின. அம்மன் பல தடவைகள் இவரின் கனவில் தோன்றி இருக்கின்றார். அம்மன் இந்தப் பெண்ணின் கனவில் கடந்த வாரமும் தோன்றி இருக்கின்றார். இந்த வீட்டில் உள்ள துளசி மரத்தின் அடியில் இருந்து சனிக்கிழமை மாலை வெளிப்படுவார் என்று சொல்லி இருக்கின்றார்.

அம்மனின் வாக்கை வேத வாக்காக நம்பிய இவரும் அயலவர்களும் சனிக்கிழமை அன்று மாலை துளசி மரத்தடியைச் சுற்றி சீலையால் மறைப்புக் கட்டினர்.அம்மன் எப்போது வெளிப்படுவார் என்று வீட்டுக்காரர்கள் பக்திப் பரவசத்தோடு காத்திருந்தனர். அன்றைய தினம் மாலை 6.00 மணிக்கும் மாலை 7.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மண்ணுக்குள் இருந்து அழகிய அம்மன் சிலை வெளிப்பட்டு வந்தது.

தற்போது இவர்கள் இந்தச் சிலையை வீட்டில் சுவாமி அறையில் வைத்து பூசித்து வருகின்றனர். இந்த தெய்வீக அற்புத அம்மன் சிலையைத் தரிசித்து அருள் பெற நாளாந்தம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்












 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’