வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 17 ஜூலை, 2010

உலகக்கோப்பை சூதாட்டம்

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்த காலப்பகுதியில், அதனை வைத்து சட்டவிரோதமாக சூதாட்டம் நடத்திய சம்பவம் தொடர்பில் ஆசியாவில் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதுடன், சுமார் பத்து மில்லியன் டாலர்கள் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சர்வதேச பொலிஸான இண்டர்போல் அமைப்பின் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் சீனாவிலும், தாய்வானிலுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அப்பகுதிகளில் இயங்கும் குற்றக்கும்பல்களை சேர்ந்தவர்களாவர்.
சோகா 3 என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடக்கும் சுமார் 800 இடங்களில் பொலிஸார் சோதனை நடத்தினர். இந்தச் சூதாட்ட இடங்களில் 155 மில்லியன் டாலர்கள் வரை பந்தயம் கட்டப்படுவது வழக்கமாகும்.
தூர கிழக்கில் பெரும் பந்தயம் முன்வைக்கப்பட்டதை அடுத்து, உலகக்கோப்பை ஆட்டங்கள் ஆரம்பித்த ஜூன் 11 ஆம் திகதியன்றே இந்த சோகா நடவடிக்கையும் ஆரம்பித்தது.
பிரான்ஸ் இண்டர்போல் தலைமை அலுவலகத்தில் இருந்து சீனா, ஹொங்கொங், மக்காவ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய இடங்களில் உள்ள அதிகாரிகளுடன் இந்த நடவடிக்கை ஒருங்கிணைக்கப்பட்டது.
பத்து மில்லியன் டாலர்கள் பணம், கார்கள், வங்கி கடன் அட்டைகள், கணனிகள், செல்லிடத்தொலைபேசிகள் ஆகியவற்றை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், குற்றக்கும்பல்களுடனும், கறுப்புப்பணத்தை வெள்ளையாக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள், மற்றும் விபச்சாரம் ஆகியவற்றுடனும் தெளிவான தொடர்பைக் கொண்டிருந்தார்கள்.
இந்த மாதிரியான நடவடிக்கையில், தூர கிழக்கில் உள்ள பல காவற்துறை அமைப்பினர் மிகவும் நெருக்கமாக சேர்ந்து செயற்பட்டது இதுதான் முதற்தடவை என்று லியோனில் உள்ள இண்டர் போல் பிரிவின் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
இந்த சட்டவிரோத பந்தயங்கள் இணையம் மற்றும் தொலைபேசிகள் மூலமே மேற்கொள்ளப்பட்டதாக இண்டர்போல் கூறுகிறது.
ஆனால், இந்த சூதாட்டதாரிகள் போட்டியில் நடந்த எந்தவொரு ஆட்டத்தின் முடிவிலாவது ஏதாவது செல்வாக்கைச் செலுத்தினார்களா என்பது குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை.
ஆட்டங்களின் முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டனவா அல்லது எந்தவொரு ஆட்டக்காரர் மீதாவது செல்வாக்கு செலுத்தப்பட்டதா என்பது குறித்து இப்போதே பேச முடியாது என்று இண்டர்போல் கூறுகிறது.
ஆனால், தமது விசாரணைகளில் அது குறித்தும் அடிப்படையில் விசாரிக்கப்படும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’