இந்தியாவில் இலங்கை தூதரகம் இருக்கக் கூடாது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கவே கூடாது. அதை அகற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் செல்லப்பன் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த படு பாதகச் செயலைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் இலங்கை துணைத் தூதரகத்தை மூ்டக் கோரி ஊர்வலமாக கிளம்பினர்.
இதையடுத்து வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட 160 பேரை போலீஸார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு செய்தனர். இதை விசாரித்த கோர்ட் அனைவரையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவு நேற்று இரவுக்குள் சிறைக்குப் போகவில்லை. இதையடுத்து இன்று காலையில் உத்தரவு வந்து சேர்ந்ததைத் தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 160 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலையாகி வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கைப் படையினர் தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும், அடித்தே கொன்றும் அட்டூழியம் செய்து வருகின்றனர். இந்த செயலுக்கு இந்திய அரசும் உடந்தையாக இருக்கிறது.
இப்படிப்பட்ட கொலை பாதக செயல்களில் ஈடுபடும் இலங்கை அரசின் தூதரகம் இந்தியாவில் இருக்கக்க கூடாது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கவே கூடாது. அதை அகற்றியே ஆக வேண்டும். இலங்கை தூதரகத்தை அகற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார் வைகோ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’