பர்மிய ராணுவத் தலைவர் ஜெனெரல் தான் ஷ்வே, இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்துக்கு எதிராக, இந்தியாவில் இருந்து இயங்கும், ஜனநாயக ஆதரவு குழுக்கள், தலைநகர் டெல்லியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.
தான் ஷ்வே, இந்தியாவில் ஐந்து நாட்கள் தங்கியிருப்பார். அப்போது அவர், பொருளாதார மற்றும் கேந்திர உறவுகள் குறித்து இந்திய தரப்புடன் விவாதிப்பார். செவ்வாய்க்கிழமை அவர் இந்தியப் பிரதமரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பர்மிய ராணுவ அரசின் மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்த சர்வதேச கவலைகள் இருந்தாலும், இந்தியா சமீப ஆண்டுகளில் பர்மாவுடன் உறவுகளை பலப்படுத்தி வருவதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு ஒரு பகுதிக் காரணம், பர்மாவின் இயற்கை வளங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற நோக்கம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்தியா, கடந்த காலங்களில் பர்மிய ஜனநாயக இயக்கத்தின் தலைவி, ஆங் சான் சூச்சீக்கு அளித்து வந்த தார்மீக ஆதரவை இப்போது பெரிய அளவில் தொடராமல், அவரை சிறையில் அடைத்து வைத்துள்ள , ராணுவ ஆட்சியுடன் நல்லுறவைப் பேணுவது என்பது, அதன் வெளியுறவுக்கொள்கையில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான மாற்றத்தைக் காட்டுவதாக சில விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இந்தியா ஒரு தார்மீக அடிப்படையில் கடைப்பிடித்து வந்த ஜனநாயக ஆதரவு நிலைப்பாட்டைக் கைவிட்டு, இப்போது ராணுவ ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் எதைச் சாதித்துவிட்டது என்று கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த இந்தியப் பாதுகாப்பு மற்றும் கேந்திர அரசியல் ஆய்வாளர் கே.சுப்ரமண்யம், இந்தியா, இந்தக் கொள்கை மாற்றம் மூலம் என்ன லாபத்தை அடைந்திருக்கிறது என்பதை விட, நஷ்டத்தைக் குறைத்துக்கொண்டிருக்கிறது என்று கூறலாம் என்றார்.
பர்மாவுடன் இந்தியா நட்பு பாராட்டாவிட்டால், பர்மா சீனாவுடன் மேலும் சார்ந்திருக்க நேரிடும். அது இந்திய பாதுகாப்பு நலன்களுக்கு உகந்ததாக இருக்காது என்று கூறிய சுப்ரமண்யம், இதன் காரணமாகத்தான் இந்தியா தனது பர்மியக் கொள்கையில் மாற்றத்தைச் செய்திருக்கிறது. ஆனால் ஆங் சான் சூச்சீக்கு ஆதரவான நிலைப்பாட்டையோ அல்லது பர்மாவில் ஜனநாயம் மலரவேண்டும் என்ற கொள்கையையோ கைவிடவில்லை என்றார்.
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள பிரிவினைவாதக் கிளர்ச்சிக்குழுக்களுக்கு பர்மாவில் புகலிடம் கிடக்காமல் தடுப்பது, பர்மாவில் கிடைக்கும் எரிவாயு வளங்களை இந்தியா பயன்படுத்திக்கொள்வது ஆகிய இரு விஷயங்கள் தொடர்பாக இது வரை பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை ஒப்புக்கொண்ட சுப்ரமண்யம், ஆனால் இதில் இனிமேல்தான் முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’