திருகோணமலை மக்கெய்சர் மைதானத்தில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான அகில இலங்கை வலைப் பந்து போட்டியில் 'ஏ' பிரிவில் செலான் வங்கி அணியும், 'பி' பிரிவில் இலங்கை கடற்படை அணியும், 'சி' பிரிவில் குருணாகல் மலியதேவா பெண்கள் பாடசாலை அணியும் சம்பியன்களாகின.
சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்போட்டித் தொடரில் 42 அணிகள் பங்கு கொண்டிருந்தன. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் சிறந்த வலைப்பந்து ராணியாக செலான் வங்கி அணியின் வீராங்கனை செல்வி தர்சினி சிவலிங்கம் தெரிவு செய்யப்பட்டு கிரீடம் சூட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மீன்பிடி நீரியல் வளத்துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே இவருக்கான கிரீடத்தை சூட்டி விருதினை வழங்கி வைத்தார்.
'ஏ' பிரிவில்
செலான் வங்கி தம்மை எதிர்த்து விளையாடிய ஹற்றன் நஷனல் வங்கி அணியினரை 50:23 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகினர். மூன்றாம் இடத்தினை இலங்கை விமானப்படை அணியினர் பெற்றுக் கொண்டனர்.
'பி' பிரிவில்
இலங்கை கடற்படை அணி தம்மை எதிர்த்து விளையாடிய கொழும்பு மாநகரசபை அணியினரை 23:11 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு சம்பியனாகினர். மூன்றாம் இடத்தை இலங்கை விமானப்படை அணி பெற்றது.
'சி' பிரிவில்
குருநாகல் மலியதேவா பெண்கள் பாடசாலை அணி தம்மை எதிர்கொண்ட பொலன்னறுவை மாவட்ட அணியினரை 35:20 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு சம்பியனாகினர் .மூன்றாம் இடத்தை அநுராதபுரம் மாவட்ட அணி பெற்றது.
இப்போட்டித் தொடரில் சிறந்த கோல்களை போட்ட வீராங்கனையாக செலான் வங்கி அணியைச் சேர்ந்த தர்சினி சிவலிங்கம், சிறந்த தடுப்பாளராக என்.எம்.தம்மிக்கா (இலங்கை விமானப்படை அணி) சிறந்த மத்திய கள வீராங்கனையாக எஸ்.பி.ஜி.மதுவந்தி (இலங்கை கடற்படை அணி) சிறந்த பக்க தடுப்பாளர் (Wind Attack) சசிகா சமரசிங்கா ஹற்றன் நஷனல் வங்கி, வருங்கால விளையாட்டு வீராங்கனை கீர்த்திகா கீதபொன்கலன் சில்வா (யாழ் மாவட்ட அணி) ஆகியோரும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’