தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழு இன்று யாழ். குடாநாட்டில் சக்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக "சனல் 46"இனை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
யாழ். குடா நாட்டில் சக்தி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தை மூடும்படியான கட்டளைக்கு எதிரான ரிட் மனு, மேல் முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது சிரேஷ்ட அரச சட்டத்தரணி இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அனுமதிப்பத்திர கட்டணம் செலுத்தப்படுமிடத்து, ஒளிபரப்பு அனுமதிக்கப்படும் என்றும் அரச சட்டத்தரணி மன்றில் கூறினார்.இந்நிலையில், அனுமதிப்பத்திர கட்டணம் செலுத்தப்படுமிடத்து ஓகஸ்ட் 4ஆம் திகதிக்கு முன் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவினால் வரி விளக்க படிவம் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் பணித்தது. இதேவேளை, எம்.ரி.வி. சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது ரிட் (ஆணை கோரும்) மனுவினை வாபஸ் பெற்றனர்.
பாதுகாப்பு செயலாளரின் அங்கீகாரம், உள்நாட்டு அமைச்சின் அனுமதியுடன் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் "எதிர்ப்பு ஏதும் இல்லை" என்ற கடிதத்தையும் பெற்று சக்தி தொலைக்காட்சி, யாழ் குடாநாட்டில் யூ.எச்.எப் " செனல் 25"இல், 2003ஆம் ஆண்டில் ஒளிபரப்பை தொடங்கியது.
பாதுகாப்பு பிரச்சினைகள் இருந்த போதும், 6 வருடங்கள் தொடர்ந்தும் ஒளிபரப்பில் ஈடுபட்டதாகவும், 200,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இருந்த போதும் கஷ்டங்களுக்கு மத்தியில் செயற்பட்டதாகவும் ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்தது. ஜனவரி முதலாம் திகதி சக்தி ஒளிபரப்பு நிறுவன ஊழியர், சக்தி தொலைக்காட்சியின் செனல் 25 வேறு சமிக்ஞைகளால் குழப்பப்படுவதாக அறிவித்தனர்.
விசாரணையில் ஈ.ரி.என் நிறுவனம், செனல் 25இல் வசந்தம் ஒளிபரப்பினை ஒளிபரப்பு செய்வதாக அறியப்பட்டது. போர் முடிவுக்கு வந்ததும் வட மாகாணத்தில் வாய்ப்புக்கள் அதிகம் காணப்பட்டதால் பல நிறுவனங்கள் வட பகுதியில் தொழிற்பட ஆர்வம் காட்டின. இந்த பின்னணியில் அரச நிறுவனமான ரூபவாஹினி கூட்டுத்தாபனம், தனது தமிழ் மொழி ஒளிபரப்பினை "செனல் ஐ"யில் ஆரம்பித்தது. ஜனவரி 5ஆம் திகதி தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழு, சக்தியின் யாழ். ஒளிபரப்பை நிறுத்த கட்டளையிட்டமை குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’