வவுனியா நகரசபையின் சகல நடவடிக்கைகளுக்கும் தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என அச்சபையின் 11 அங்கத்தவர்களில் ஆளும் த.தே. கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவர் உட்பட 8 பேர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரசபையின் மாதாந்தக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் நகரசபையின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக 29 விடயங்களை முன்வைத்து கையெழுத்திட்டு அறிக்கையொன்றை சபையில் சமர்ப்பித்தனர்.
சபையின் வவுனியா நகரசபை தலைவர், உபதலைவர், செயலாளர் ஆகியோருக்கு எதிராக அவர்கள் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தனர்.
குறித்த விடயங்கள் தொடர்பாக சரியான விளக்கம் தந்தால் கடந்த காலங்கள்போல் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் இல்லையேல் ஒத்துழைப்புக்களை வழங்க மாட்டோமென்றும் மேற்படி அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.
இறுதியாக, எடுத்த முடிவின்படி இனிமேல் நகரசபை செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதில்லை அவர்கள் தீர்மானித்தனர்.
வவுனியா நகரசபை சபையில் 11 அங்கத்தவர்களில் 5 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். புளொட் அமைப்பைச் சேர்ந்த மூவரும் ஐ.ம.சு.முன்னணியைச் சேர்ந்த இருவரும் ஸ்ரீல.மு.காவைச் சேர்ந்த ஒருவரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புளொட் ஐ.ம.சு.மு. உறுப்பினர்களுடன் த.தே.கூ. உறுப்பினர்கள் மூவர் உட்பட 8 பேர் நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
'நாம் இதுவரை கட்சி அரசியல் பேதமின்றி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினோம். ஆனால் தற்போது நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். இது தொடர்பாக நாம் நகரசபைத் தலைவரிடம் விளக்கம் கோரியபோது அவர் முறையாக பதிலளிக்கவில்லை. அதனாலேயே நாம் இத்தீர்மானத்தை மேற்கொண்டோம்" என வவுனியா நகரசபையின் எதிர்கட்சித் தலைவர் ஜி.லிங்கநாதன் (புளொட்) தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு இன்று தெரிவித்தார்.
இது தொடர்பாக உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் வவுனியா மாவட்டச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்விடயம் குறித்து வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி. நாதனிடம் தொடர்புகொண்டபோது இது தொடர்பாக கருத்துக்கூற மறுத்துவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’