ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதுடில்லி விஜயத்தின்போது இலங்கை இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியா எந்த அழுத்தமும் வழங்கவில்லையென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பிலான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தற்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இருக்கும் அதேநிலைப்பட்டிலேயே அந்நாட்டு எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியும் (பி.ஜே.பி.) இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியுடனான இந்திய விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய அமைச்சர் பீரிஸ் அவ் விடயம் தொடர்பாக விளக்கமளிக்கும் பொருட்டு கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவல்களை வெளியிட்டார். அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது;
“புதுடில்லி விஜயத்தின்போது ஜனாதிபதி தலைமையில் நாம் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்படப் பல்வேறு உயர்மட்டப் பிரமுகர்களைச் சந்தித்து பேசினோம். அது மட்டுமல்லாது தமிழ் நாட்டு எம்.பி.க்கள் 21 பேரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தனர்.
இதன்போது அரசியல் தீர்வு பற்றித் தமிழ்க் கட்சிகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பேச்சுகள் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புகள் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறினோம்.
அது மட்டுமல்லாது இந்தப் பேச்சுகளை முன்னெடுத்து செல்லவிருப்பது பற்றியும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினோம். இதேநேரம், இந்திய அரசாங்கத்திடமிருந்து எமக்கு எந்த அழுத்தங்களும் வரவில்லை. இது தான் தீர்வு. இதைத்தான் நீங்கள் வழங்க வேண்டும் என்றெல்லாம் எந்த அழுத்தத்தையும் புதுடில்லி எமக்கு வழங்கவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையிலான சந்திப்புகள் மிகவும் வெளிப்படையானதாகவே இருந்தது. இந்தியா அதனது கருத்துகளை கூறியது. நாம் எமது முன்னுரிமைகள் மற்றும் நோக்கங்கள் பற்றி அவர்களுக்கு விளக்கிக் கூறினோம். அந்த வகையில் சந்திப்புகளானது மிகவும் சுமுகமானதும் முன்னேற்றங்கள் மிக்கதுமாக இருந்தன.அது மட்டுமல்லாது இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக நெருங்கிய உறவு இருந்து வரும் நிலையில் இலங்கை மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான எந்த சந்தர்ப்பமும் இல்லை.
அத்துடன், இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா ஸ்வராஜையும் நாம் சந்தித்துப் பேசினோம். இலங்கை தொடர்பாக காங்கிரஸ் அரசாங்கம் பின்பற்றும் வெளியுறவுக் கொள்கையை பி.ஜே.பி.யும் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார். இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதில் இந்திய அரசாங்கம் சந்தேகமடைந்தது போல் எதிர்க்கட்சியும் சந்தேகப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவிகளுக்கும் சுஷ்மா ஸ்வராஜ் இணக்கம் வெளியிட்டார்.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த இந்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சி ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.அது மட்டுமல்லாது இலங்கையின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் இந்திய அரசாங்கம் போலவே எதிர்க்கட்சியும் ஏற்றுக் கொள்வதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்” என்றார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’