தமிழகத்தில் மாநிலம் முழுவதுமாக போலி மருத்துவர்களைக் களையும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ள காவல்துறையினர் பல இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி உரிமம் பெறாமல் ஆங்கில மருத்துவம் செய்துவருவோர் நூற்று எழுபதுக்கும் அதிகமானோரைக் கைதுசெய்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் ஆய்வுகளை மேற்கொண்டு, முறைகேடாக அலோபதி மருத்துவத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் 2000 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை அரசாங்கதிடமும் காவல்துறையினரிடமும் வழங்கியிருந்ததனர்.அந்த பட்டியலின் அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை காவல் துறையினர் அதிரடி சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.
"எவ்வித கல்வித் தகுதியும் இன்றி அலோபதி மருத்துவம் செய்பவர்கள் ஒருபுறம், சித்தா, ஆயுர்வேதம் யுனானி போன்ற பிற வகை மருத்துவம் கற்றவர்கள் விதிகளுக்கு புறம்பாக நவீன அலோபதி மருத்துவம் செய்தல் இன்னொரு புறம் என போலி மருத்துவர்களை இருவகையாகப் பிரிக்கலாம்." என தமிழோசையில் தகவல் வெளியிட்ட இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழகப் பிரிவில் செயலாளராக இருக்கும் டாக்டர் டி.என்.ரவிசங்கர் தெரிவித்தார்.
போலி மருத்துவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் தாங்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கின் அடிப்படையிலேயே தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் இருப்பதாக அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
போலி மருத்துவர்களைக் கண்காணித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கென்றே தமிழக காவல்துறையில் விசேட பிரிவு ஆரம்பிக்கப்பட வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழக பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’