வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 5 மே, 2010

பொலிஸ் பதிவு, ஊரடங்கு - அவசரகாலச் சட்டத்தில் நீக்கம் : பீரிஸ் _


அவசரகாலச் சட்டத்தின்கீழ் இதுவரை நடைமுறையிலிருந்த பொலிஸ் பதிவுமுறை, கூட்டங்களை நடத்துவதற்கான தடை, ஒன்றுகூடுவதற்கான தடை, ஊரடங்குச் சட்டம் என்பன உட்பட சில ஷரத்துக்களுடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுகின்றன என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டம் தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் பீரிஸ் சபையில் மேலும் கூறியதாவது :
அவசரகாலச் சட்டத்தை மாதா மாதம் நீடிக்கும் நிலைமை அன்று தோன்றியது. இது தேவையான காலத்தைவிட அதிகரிக்கப்படுவதற்கு ஜனாதிபதி விரும்பவில்லை.
நாட்டினதும் மக்களினதும் நன்மைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இதனை நடைமுறைப்படுத்துவது நோக்கமல்ல. ஒரு வருடத்துக்கு முன் நீக்கியிருந்தால், அது ஆபத்தாக அமைந்திருக்கும். ஐக்கிய தேசிய கட்சியின் கரு ஜயசூரிய எம்.பி. அவசரகாலச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு இங்கு தெரிவித்தார். ஆனால் இது நடைமுறைக்கு சாத்தியமானதல்ல.
எவருக்கும் அடிபணியவில்லை
தற்போதைய சூழ்நிலையில் எவற்றை நீக்கவேண்டும், எவற்றை தொடரவேண்டும் என ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தீர்மானம் எடுக்கவேண்டும். எவருக்கும் அடிபணிந்து சட்டத்தின் சரத்துக்களை நீக்கவில்லை. அவசரகால சட்டத்தின் பல சரத்துக்கள் நான்கு வருடங்களாக அமுலில் உள்ளன.
சரியானவற்றை சரியான நேரத்தில் எடுக்கவேண்டும். சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதிக்காத வகையில் தீர்மானம் எடுக்கவேண்டும்.
தேசத்தின் பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவசரகால சட்டம் அவசியம் தேவை. பயங்கரவாத பிரசாரங்களை கடந்த காலங்களில் நாட்டுக்குள் சுதந்திரமாக மேற்கொள்ள முடிந்தது. அதனை தடுக்கக் கடுமையான சட்டங்களை கடைப்பிடித்தோம்.

வதந்திகளைப் பரப்புவதை தடுப்பதற்கான கடுமையான சட்டங்களும் தற்போது அவசியமில்லை. பொலிஸ் சட்டங்களுக்கு அமைய செயற்பட முடியும். கூட்டங்களை ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு எதிராக அன்று கடுமையான சட்டம் இருந்தது. அதனையும் தற்போது நீக்க முடியும். இதனை பொலிஸ் சட்டத்தினால் கட்டுப்படுத்த முடியும்.
சொத்துக்களையும் உயிர்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும். எனவே மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இவற்றை நீக்க முடியும். முப்படையினருக்கும் யுத்தத்தின் போது வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் நீக்கப்பட்டுள்ளன. மோட்டார் வாகனங்கள் தொடர்பான சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதியுயர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வலயங்கள் தேவை. அவற்றில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் அவசியமாகும்.

தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற பல புலி ஆதரவு அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. எனவே இச்சட்டங்களில் சிலவற்றை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டிய தேவை உள்ளது.
முழுமையாக நீக்க முடியாது
அவசரகால சட்டத்தை முழுயைமாக நீக்க முடியாது. அது நடைமுறை சாத்தியமற்றது. தேசிய பாதுகாப்புக்கு அது அவசியமானதாகும். படையினருக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. விசாரணைகளையும் உளவு நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதாயின் இச்சரத்தினையும் நீக்க முடியாது.
சுற்றுலாத்துறை மேம்பட்டு வருகின்றது. எனவே வெளிநாட்டு வருமானங்களை அதிகரிப்பதற்கு சட்டங்கள் தளர்த்தப்பட்டு வருகின்றன. புனரமைப்புக்கள் புனர்வாழ்வு தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றையும் நியமித்துள்ளார்.
மேலும் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை பெற்றுக் கொடுத்துள்ளார். உலகின் கவனத்தை திருப்புவதற்காக மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்."
இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’