அரசாங்கம் தனது நல்லெண்ணத்தை வெளிக்காட்டி, தடுப்புக் காவலில் சிறைச்சாலைகளில் இருக்கின்ற சகல தமிழ்க் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான அப்பாத்துரை விநாயகமூர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"கௌரவமிக்க இந்தச் சபையிலே புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர், பிரதம மந்திரி, மற்றும் இந்தச் சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது இனிய புதுவருட வாழ்த்துக்களை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பிரதம மந்திரியைப் பொறுத்தவரை பல ஆண்டு கால அனுபவம் பெற்றவர் என்பதுடன் இனவாத அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒருவராவார்.
இன்றைய தினம் அவசர கால ஒழுங்கு விதிகள் நீடிப்புப் பிரேரணை மீது எனது வாதங்களை முன்வைப்பதற்கு முன் முக்கியமான விடயம் ஒன்றை இன்று குறிப்பிட விரும்புகின்றேன்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட செய்தி ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தடை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். .அதனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி செயலாளர் ஏற்றுக் கொண்டு ஆமோதித்தும் இருந்தார்.
அரச துறையில் சிரேஷ்ட பதவி வகிக்கும் அலுவலர்கள் அரசியல் ஈடுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதே மரபாகும்.
மேலும் தாபன விதிக்கோவையானது சிரேஷ்ட அரச அலுவலர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அண்மையில் மாற்றம் பெற்றுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. இதனை கௌரவ பிரதம மந்திரி அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
ததேகூ தீவிரமாக எதிர்க்கின்றது
14 உறுப்பினர்களைக் கொண்டு வடக்குக் கிழக்குத் தமிழர்களின் குரலாக அவர்களை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்த அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதை மிகத் தீவிரமாக எதிர்க்கின்றது.
ஒரு நாட்டில் அவசர கால நிலை காணப்படும் பொழுது மட்டுமே அவசர கால விதிகள் பிரகடனம் செய்யப்படும். அதன்படி இந்த அவசர கால ஒழுங்கு விதிகள் தற்போது தேவையற்றவை. பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகால ஒழுங்கு விதிகள் போன்ற விசேட சட்டங்கள் படையினருக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கியுள்ளதுடன் அதன் விளைவாக மனித உரிமை மீறல்கள் வலுவாக இடம்பெறுகின்றன.
சட்டத்திற்கு முரணான கைதுகள், ஆட் கடத்தல்கள், கப்பம் கோருதல், கொள்ளைச் சம்பவங்கள், அநீதியான கொலைகள் ஆகியன இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தொடராக இடம்பெற்று வரும் கடத்தல்கள், கொலைகள், கற்பழிப்புச் சம்பவங்கள் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினாலேயே நடாத்தப்படுகின்றன என்ற பயங்கர உணர்வு யாழ்ப்பாண மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
பொலிஸாரின் அறிக்கையைப் பொறுத்த வரை, கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள், ஒரு பாலியல் வல்லுறவு மற்றும் இரண்டு கடத்தல் முயற்சிகள் என்பன இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
முன்னாள் இராணுவத்தினர் இதன் பின்னணியில் இருக்கலாம் எனப் பொலிஸார் விசாரணைகளின் போது சந்தேகிப்பதாகத் தெரிய வருகின்றது.
தடுப்புக் காவலில் சிறைச்சாலைகளில் இருக்கும் சகல தமிழ்க் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென உருக்கமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.
மிருகங்களைப் போல் கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் 300,000 பேரில் 10,000 பேர் வெளியில் திரியாதவாறு மறைவிடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களும் விடுவிக்கப்படல் வேண்டும்.
கொடுமையான விதிகளைக் கொண்டமைந்த இந்த அவசர கால ஒழுங்குப் பிரமாணங்கள் தமிழருக்கு மட்டுமே கட்டவிழ்த்து விடப்படுவதால் அச் சட்டத்தின் நீடிப்புக்கான இப்பிரேரணையை ஆளும் தரப்பு, எதிர்த் தரப்பு இரு பகுதியிலும் அமர்ந்திருக்கும் தமிழ்ப் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென மிக வினயமுடன் வேண்டுகின்றேன்.
அனைத்து எதிர்க் கட்சிகளையும் இதற்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அவசர கால விதிகளினுடைய நீடிப்பினை நாங்கள் எதிர்க்கின்றோம்" என்றார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’