வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

விடுதலைப் புலிகள் போன்று செயற்பட சிலர் இப்போதும் முயற்சி 30 வருடங்கள் அனுபவித்த வேதனைகள் தமிழர்களுக்கு இனியும் தேவை தானா? யாழ்.தேர்தல் கூட்டத்தில்

விடுதலைப் புலிகளைப்போன்று செயற்படுவதற்குச் சிலர் இப்போது முயன்று வருகின்றனர். எனவே, தமிழ்மக்களாகிய நீங்கள் புத்திசாதுரியத்துடன் நடந்துகொள்ளவேண்டும். 30 வருட காலமாக நீங்கள் அனுபவித்து வந்த வேதனைகள் இனியும் தேவை யா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.
 இவ்வாறு  நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பொதுமக்கள் முன் னிலையில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முற்பகல் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும்  12 வேட்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
இந்தக் கூட்டத்தில் இறுதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். முதலில் சில வரிகளை சிங்களத்தில் பேசிய அவர் பின்னர் தமது உரையைத் தமிழில் தொடர்ந்தார்.
அவர் தமதுரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:
30 ஆண்டுகளாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள உங்களுக்கு உரிமையைப் பெற்றுத் தருவதே எனது குறிக்கோள். இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நீரைக் கொண்டு வருவதற்கான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன்மூலம் இங்குள்ள மக்களின் விவசாய, குடிதண்ணீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படும். யாழ்ப்பாண மக்கள் தேர்தலில் சுதந்திரமாக வாக்களிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது. வடக்கு, கிழக்கு, தெற்கு எல்லாம் எனக்கு ஒன்றுதான். நான் எல்லா மக்களையும் ஒன்றாகவே நோக்குகின்றேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் எனக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி.
குறுகிய அரசியல் பேதம் வேண்டாம்
30 வருட பயங்கரவாதம் இப்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது எவரும் பயப்படத் தேவையில்லை. கடற்றொழில், விவசாயம் போன்றவற்றில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்போது அனைத்து மக்களும் எங்கும் போகலாம். வரலாம். நான் சிங்களவன், நான் தமிழன், நான் முஸ்லிம் என்ற இன வேறுபாடு இப்போது இல்லை. குறுகிய அரசியல் பேதங்கள் இனிமேல் வேண்டாம்.
மக்களாகிய உங்களின் தேவைகளை மக்கள் சபை மூலம் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். பல வருடங்களாக இல்லாத அபிவிருத்தி இப்போது இடம்பெறுகின்றது. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து வசதிகள் அதிகரித்து வருகின்றன.இன்று(நேற்று) வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் உள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களில் 164 பேர் விடுதலை செய்யப்படுகின்றார்கள். அவர்கள் தமது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். வெகு விரைவில் ஏனையவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள். அத்துடன் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து 148 பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள். புனர்வாழ்வு முகாம்களில் உள்ள இளைஞர்களின் கணனிப்பயிற்சிக்காக வவுனியா, பம்பைமடுவில் ஒரு பயிற்சி நிலையம் அமைக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழகம் விரைவில் முழுமைபெறவுள்ளது. அங்கு விரைவில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது. சர்வதேச ரீதியில் தமிழ் பிள்ளைகள் நல்ல பெயர் பெற வேண்டும். யாழ்தேவி மீண்டும் வரும். ஏ 9 வீதியால் எவரும் போகலாம், வரலாம். ஆசியாவிலேயே சிறந்த நூலகம் யாழ். பொதுநூலகம். அதனை ஐக்கிய தேசியக் கட்சி எரித்தது. அது எதிர்காலச் சந்ததிக்குச் செய்த பெரிய பாவம். அநியாயம். எனவே மக்களாகிய நீங்கள் எம்மோடு இணையுங்கள். இனவாத அரசியல் வேண்டாம். குறுகிய எண்ணங்கள் வேண்டாம். ஆசியாவின் கேந்திர நிலையமாக எமது நாட்டை மாற்றுவோம்  என்றார்.
இந்த நிகழ்வின்போது, மீளக் குடியமர்ந்த மக்களுக்கு இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடுகளின் திறப்புகளையும் ஜனாதிபதி வீட்டு உரிமையாளர்களிடம் வழங்கினார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமதுரையில் தெரிவித்தவை வருமாறு:
இணக்க அரசியலின் அடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு இணைந்து செயற்பட ஏனைய தமிழ்த் தலைவர்கள் தயாராக இருந்தால், அவர்களுடன் இணைந்து செயற்பட நானும் தயாராக உள்ளேன். எனினும் ஏனைய தமிழ்த் தலைமைகள் தமது சுய இலாபங்களுக்காக அவ்வாறு செயற்பட முன்வரமாட்டார்கள்.
யாழ்ப்பாணத்தில் விரைவில் மூன்று ஆடைத் தொழிற்சாலைகளை அமைத்து சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி இங்கு வந்துள்ள முதலீட்டுச் சபையின் தலைவருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதற்குத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்   என்றார்.
முன்னதாக நேற்றுக்காலை 10.45 மணியளவில் பலாலி படைத்தளத்தில் இருந்து ஹெலி மூலம் யாழ். கல்வி வளாகத்துக்கு அருகில் உள்ள மைதானத்தில் வந்திறங்கிய ஜனாதிபதி அங்கிருந்து நல்லூர் ஆலயத்துக்குச் சென்று விசேட பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டார். அதன் பின்னர் யாழ்.நாகவிகாரைக்குச் சென்று அவர் வழிபட்டார். பின்பு யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் வவுனியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’