கடைகளைச் சூறையாடுபவர்களை இராணுவம் கைது செய்கிறது |
சிலி பூகம்பத்தில் தப்பியவர்களுக்கு உதவுவதில் அதிகாரிகள் சிரமம்
சிலி நாட்டில் சனியன்று தாக்கி, பேரழிவு ஏற்படுத்திய பூகம்பத்தில் உயிர் தப்பியவர்களுக்கு உணவு மற்றும் குடிநீரை வழங்குவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.
மோசமாகப் பாதிக்கப்பட்ட சில இடங்களில் கடைகள் சூறையாடப்படுவதை தடுப்பதற்காக ஆங்காங்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பூகம்பம் மையம் கொண்ட பகுதிக்கு மிக அருகில் உள்ள கொண்செப்சியோன் நகரில் கடைகளை கொள்ளையடிப்பவர்களை இராணுவத்தினர் கைது செய்தனர்.
தென்மத்திய சிலியில் உள்ள சில சமூகங்களுடனான தொடர்புகள் இன்னமும் துண்டிக்கப்பட்டே இருக்கின்றன.
இறந்தவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக இன்னமும் அதிகரிக்கும் என்று அதிபர் மைக்கல் பச்சலட் கூறியிருக்கிறார்.
இதுவரை 700க்கும் சற்று அதிகமானவர்களே இறந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஏஐஜியின் ஆசிய காப்புறுதி வணிகத்தை வாங்கிய புரூடன்சியல்
புரூடன்சியல் நிறுவன சின்னத்தின் அருகே ஒருவர் நடந்து செல்கிறார் |
இந்த விற்பனையின் மூலம் புரூடன்சியல் ஆசியாவின் மிகப்பெரிய காப்புறுதி நிறுவனமாகிறது.
இதற்காக 20 பில்லியன் டாலர்களை பணமாகவும், மேலும் பத்தரை பில்லியன் டாலர்களை பங்குகள் மற்றும் ஏனைய உறுதிகளாகவும் வழங்குவதாக புரூடன்சியல் கூறியுள்ளது.
இந்த வணிக ஒப்பந்தம், 2008 ஆம் ஆண்டில் பெரும் வீழ்ச்சியில் இருந்து இழப்பீடு கொடுத்து ஏஐஜி நிறுவனத்தை காப்பாற்றிய அமெரிக்க அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
திபெத்தியர்கள் சட்டவிரோதமாக நேபாளம் செல்வதை தடுக்கக் கோரிக்கை
நேபாளத்தில் போராட்டத்தில் ஈடுபடும் திபெத்தியர்கள் |
நேபாளத்துக்குள் இவ்வாறு நுழைய முற்பட்டு கைது செய்யப்படும் திபெத்தியர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
17 பேர் இந்த வாரம் நேபாள பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
திபெத்திய ஆன்மீகத்தலைவரான தலாய் லாமாவின் இருப்பிடமான, இந்திய நகரான தரம்சாலாவுக்கு செல்லும் யாத்திரிகர்கள் உட்பட ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் நேபாளத்துக்கு பயணம் செய்கிறார்கள்.
இந்தியப் பிரதமர் சவுதி அரேபியாவுக்கு விஜயம்
இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் |
இந்தியப் பிரதமர் ஒருவர் சவுதிக்கு கடந்த 30 ஆண்டுகளில் மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவாகும்.
குற்றவாளிகளை மீளப் பெறுவதற்கான உடன்படிக்கை ஒன்றை பெறுவதை நீண்ட கால இலக்காகக் கொண்டிருந்த இந்தியா, பிரதமரின் இந்த விஜயத்தின் போது, அதற்கான உடன்படிக்கை ஒன்றை சவுதி அரசுடன் ஏற்படுத்திக்கொண்டது.
சவுதி அரேபியா இந்தியாவில் மூலதன முதலீடுகளைச் செய்வதை ஊக்குவிக்கவும், பரஸ்பர வர்த்தகத்தை விருத்தி செய்யவும் இந்திய வர்த்தகப் பிரமுகர்கள் குழு ஒன்றையும், மன் மோகன் சிங் தன்னோடு அழைத்து சென்றிருந்தார்
கொழும்பில் ஆர்ப்பாட்டம் |
பிரித்தானிய அரசுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மிலி பாண்ட் கலந்து கொண்டமையையும், பிரித்தானிய பிரதமர் கோடன் பிரவுண் அந்த அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியதையும் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது.
பிரித்தானிய தூதரகத்தின் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை அரச ஆதரவுக் கட்சியாகிய தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. அந்த முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் இதில் கலந்து கொண்டு எதிர்ப்பு கோஸங்களை எழுப்பினார்கள்.
இங்கு செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வேறொரு நாட்டின் பிரிவினைவாதிகளுக்கு பிரித்தானியாவின் தலைவர்கள் உதவி செய்வதைத் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகக் கூறினார்.
இதுபற்றிய தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
‘’இந்திய வரவு செலவுத் திட்டத்தால் விவசாயத்துறை பாதிக்கும்’’- விமர்சகர்கள்
இந்திய விவசாயிகள் |
இந்த வரவுசெலவுத்திட்டம் விவசாயத் துறை மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த பொருளியல் வல்லுநரும், டாடா சமுகவியல் விஞ்ஞானக் கழகத்தில் வருகை தரு பேராசிரியருமான முனைவர் வெங்கடேஷ் ஆத்ரேயா கடந்த ஆண்டில் ஏற்பட்ட பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது ஒட்டுமொத்த வேளாண்துறைக்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதாக் கூறினார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து அடிப்படையிலான உரமானியம் காரணமாக உரவிலைகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தவிர இம்முறை நிதிநிலை அறிக்கையில் அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை, விவசாயத்துறை சார்ந்த போக்குவரத்து மற்றும் நீர்ப்பாசனம், மின்சார செலவீனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் முனைவர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறினார்.
முனைவர் வெங்கடேஷ் ஆத்ரேயா தமிழோசைக்கு அளித்த செவ்வியை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
வன்கூவர் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நிறைவு
குளிர்கால ஒலிம்பிக் நிறைவு விழா |
வன்கூவரில் 17 நாட்களாக நடைபெற்றுவந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டித்தொடரின் இறுதி விழா நிகழ்வுகளில் பெரும் உற்சாக ஆரவாரத்தைக் காணமுடிந்தது.
கனடா 14 தங்கங்கள், 7 வெள்ளிகள் மற்றும் ஐந்து வெண்கலங்கள் என தங்கப்பதக்கப்பட்டியலில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் அமெரி்க்கா மொத்தமாக 37 பதக்கங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஜேர்மனி முப்பது பதக்கங்களையும் நோர்வே 23 பதக்கங்களையும் மொத்தமாக பெற்றுள்ள நிலையில் எமி வில்லியம்ஸ் பெற்ற ஒரு தங்கத்துடன் குளிர்கால ஒலிம்பிக்கில் பிரிட்டன் ஒரே ஒரு பதக்கத்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
டியூரினிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஷெல்லி ருட்மனின் வெள்ளிப்பதக்கமொன்றுடன் மட்டும் நாடு திரும்பிய பிரிட்டன் அணியால் இம்முறை தங்கப்பதக்கத்துடன் சிறிதளவு முன்னேற்றத்தை மட்டுமே காட்ட முடிந்திருந்தது.
ஒஸ்ட்ரியா 16 பதக்கங்கள், ரஷ்யா 15 பதக்கங்கள், கொரியா 14, சீனா, சுவீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தலா 11 பதக்கங்கள் என பட்டியலில் அடுத்த அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
ஏனைய நாடுகள் பத்துக்கும் குறைவான பதக்கங்களைப் பெற்றுள்ளன.
2 வெள்ளிகள் பெற்ற லத்வியாவுக்கு அடுத்தபடியாக ஒரு தங்கத்துடன் பிரிட்டனும் எஸ்டோனியா மற்றும் கசக்ஸ்தான் ஆகிய நாடுகள் தலா ஒவ்வொரு வெள்ளிகளுடனும் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன.
நேற்று நிறைவடைந்த போட்டி இறுதி நாள் நிகழ்வில் கருத்துதெரிவித்த ஒலிம்பிக் தலைவர் ஜெக் ரொஜே “ முழுநகரத்தினதும் அசாத்தியமான ஒட்டுமொத்தமான ஒத்துழைப்பு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு மெருகூட்டியது'' என்றார்.
82 நாடுகளைச் சேர்ந்த 2500 போட்டியாளர்கள் இந்தப் போட்டித் தொடரில் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’