![]() | |
| தென்கிழக்கு பல்கலைக்கழகம் |
இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள் மூடல்
இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவ குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நிர்வாகங்கள் தீர்மானித்துள்ளன
. பல்கலைக்கழகங்களில் சுமூக நிலையை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களை விடுதிகளிலிருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் கலாநிதி பத்மநாதனை பதவியிலிருந்து விலகுமாறு வற்புறுத்திய மாணவர் பேரவை பிரதிநிதிகளுக்கும், இதன் காரணமாக மாணவர் பேரவையை கலைக்குமாறு கோரிக்கையை முன் வைத்த மாணவர்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.
இதனால் சுமூக நிலையை ஏற்படுத்தும் வகையில் வைத்திய பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களின் விரிவுரைகளை இடைநிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டதாக பதில் துணைவேந்தர் கலாநிதி கே. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை தேர்தலின் பின்னர் இரண்டு மாணவ குழுக்களிடையே அமைதியற்ற சுழ்நிலை காணப்பட்டதாகவும் இதனையடுத்தே விரிவுரைகளை தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மன்சூர்.ஏ.காதர் கூறுகின்றார்.
தமிழக சட்டபைக்கான புதிய கட்டடம் திறப்பு
![]() | |
| பிரதமர் திறந்து வைக்கிறார் |
தமிழகத்தின் புதிய சட்டப்பேரவை, தலைமைச் செயலக வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வளாகத்தைத் தனது கனவுத் திட்டமாக தமிழக முதல்வர் கருணாநிதி கூறிவந்திருக்கிறார்.
நான்கு வட்டங்களாக, அதி நவீன வசதிகளுடன், பிரம்மாண்டமாக இக்கட்டிடம் எழும்பி வருகிறது.
தன்னுடைய உரையில் பிரதமர் மன்மோகன்சிங் முதல்வர் கருணாநிதியின் தலைமைக்கு புகழாரம் சூட்டினார். கருணாநிதியின் தலைமையில் தமிழ்நாடு பீடுநடைபோடுவதாகவும், ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் முன்னோடியாகத் திகழ்கிறது என்றும் கூறினார்.
இலங்கையில் குளவி, தேனீயை கலைக்கும் நடவடிக்கையால் சர்ச்சை
![]() | |
| தேன் கூடு |
இலங்கையின் முக்கிய சுற்றுலா மையங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் குளவிகளையும் தேனீக்களையும் கலைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுற்றுலா மையங்களில் ஒன்றாக விளங்கும் சிகிரியா குன்றுப் பகுதியை சூழவுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள், பல நூறு வருடங்களாக இந்த மலைப்பகுதிக்குள் கூடுகட்டி குடிகொண்டுருக்கும் சில அரியவகை குளவிகளை கலைப்பதற்கு மிக கொடூரமான நடைமுறைகள் கைக்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த பகுதியில் குளவிகள் மற்றும் தேனீக்கள் அதிகமாக காணப்படுகிறது. இவற்றால சில சமயங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அண்மைய நாட்களில் இந்தக் குளவிகளை கலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், குளவிகளையும் தேனீக்களையும் கூண்டோடு அழிப்பதற்காக நெருப்பினையும் சில இராசயன திரவங்களைப் பயன்படுத்தியும் கொடூரமான நடைமுறைகளைக் கையாள்வதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாடு தொடங்கியது
![]() | |
| டூனா மீன்கள் |
உலக அளவில் அழிந்து வரும் உயிரனங்களை பாதுக்காகும் நோக்குடன் சைட்டஸ் எனப்படும் அமைப்பின் கூட்டம் சனிக்கிழமையன்று கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் தொடங்கியுள்ளது.
இந்த மாநாட்டில் 175 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். உலகளவில் அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க பல பிரேரணைகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
மிக அரிய வகை மீன் இனமான புளூஃபின் டூனா மற்றும் உலகின் அனைத்து சுறா மீன்கள் வேட்டையாட முழுத்தடை விதிப்பது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
இது மட்டுமல்லாமல் யானைத் தந்தத்தின் வர்த்தகம், பனி கரடிகளை வேட்டையாடுவதை போன்றவற்றிலும் மாறுதல்களை கொண்டு வரவும் இரண்டு வாரகால நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் தடைகள் அமலுக்கு வர வேண்டும் என்றால் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் தடைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
உலகக் கோப்பை ஹாக்கியை ஆஸ்திரேலியா வென்றுள்ளது
![]() | |
| ஆஸ்திரேலிய அணி வெற்றி |
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியினை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. புதுடில்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நடப்பு சாம்பியனான ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதனிடையே மூன்றாவது இடத்துக்கு நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து அணி இங்கிலாந்து அணியை 4-3 என்கிற கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
புதுடில்லியில் 12 நாடுகள் கலந்து கொண்ட உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 8வது இடத்தையும் பாகிஸ்தான் கடைசி இடத்தையும் பிடித்தன.














தமிழோசை



0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’